Followers

திருக்குறள்

Friday, October 29, 2010

அப்பா செல்லம்


எப்படி எப்படி
எல்லாமோ
தன் பாசம்
உணர்த்துவாள் அம்மா
ஒரேயொரு
கைஅழுத்தத்தில்
எல்லாமே
உணர்த்துவார்
அப்பா...


முன்னால்
சொன்னதில்லை
பிறர் சொல்லித்தான்
கேட்டிருக்கிறேன்
என்னைப்
பற்றி பெருமையாக
அப்பா
பேசிக்கொண்டிருந்ததை...

அம்மா
எத்தனையோ முறை
திட்டினாலும்
உறைத்ததில்லை
உடனே
உறைத்திருக்கிறது
என்றேனும்
அப்பா
முகம் வாடும் போது


உன் அப்பா
எவ்வளவு உற்சாகமாக
இருக்கிறார் தெரியுமா
என என் நண்பர்கள்
என்னிடமே சொல்லும்
போதுதான் எனக்குத்
தெரிந்தது
எத்தனை பேருக்குக்
கிடைக்காத தந்தை
எனக்கு மட்டும் என...


கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

சிறுவயதில்
என் கைப்பிடித்து
நடைபயில
சொல்லிக்கொடுத்த
அப்பா
என் கரம் பிடித்து
நடந்த போது
என்ன நினைத்திருப்பார்..?


லேசாக என் கால்
தடுமாறினாலும்
பதறும் அப்பா
இன்று நான்
தடுமாறிய போது
பதறாமல் இருக்கிறார்
மீளா துயிலில்...


அம்மா செல்லமா
அப்பா செல்லமா
என கேட்டபோதெல்லாம்
பெருமையாகச் சொல்லி
இருக்கிறேன்
அம்மா செல்லமான
அப்பா செல்லம் என
இன்று
அப்பா சென்ற பின்னர்
நான் யார் செல்லம்..?


எத்தனையோ பேர்
நான் இருக்கிறேன்
எனச் சொன்னாலும்
அப்பாவை போல்
யார் இருக்க முடியும்..?


சொல்லிக்
கொடுத்ததில்லை
திட்டியதும் இல்லை
இல்லை என்றும்
சொன்னதுமில்லை
வேண்டாம் எனக்
கூறியதும் இல்லை
இருந்தும் ஏதோ
ஒன்றினால்
கட்டுப்படுத்தியது
அப்பாவின் அன்பு


நானும் காட்டியதில்லை
அவரும் காட்டியதில்லை
எங்கள் பாசத்தை...
இருந்தும் காட்டிக்
கொடுத்த கண்ணீரைத்
துடைக்க இன்று
அப்பாவும் இல்லை..


அம்மாவிடம்
பாசத்தையும்
அப்பாவிடம்
நேசத்தையும்
இன்றே உணர்த்துங்கள்
சில நாளைகள்
இல்லாமலும் போகலாம்...

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

மருதாணி


கையில் மருதாணி
இட்டிருக்கும் தைரியத்தில்தான்
நான் உன்னிடம் குறும்பு
செய்வதாக குற்றம் சொல்கிறாய்..
அப்படியெல்லாம்
இல்லையடி
கையில் நீ இருக்கும் தைரியத்தில்
தான் நான் குறும்பு செய்கிறேன்...


இனி நான் இருக்கும் போது
மருதாணியே வைத்துக்கொள்ள
மாட்டேன் என்கிறாய்...
அப்போ என்னையாவது
வைத்துக்கொள்ளேன்...
மருதாணியை விட
இன்னும் அழகாக
சிவக்க வைப்பேன்
உன்னை...
பார்க்கிறாயா..??


உனக்கு நான் மருதாணி
போட்டுவிடட்டுமா என‌
சாதாரணமாகத்தானே
கேட்டேன்... உடனே
மாட்டேன் எனக் கைகளைப்
பின்னால் கட்டிக்கொண்டால்
விட்டுவிடுவேன் என நினைத்தாயா..?
கையில் தான் மருதாணி இட 
வேண்டுமா என்ன..? 


அங்கேயெல்லாம்
தொடாதேடா ப்ளீஸ்...
எனக்குக் கூசும் என ஏண்டி
சொல்கிறாய்..?
இப்படி சொன்னால்
எப்படி சும்மா இருக்கும்
என் பிஞ்சுவிரல்கள்... ??


'ஏங்க' என நீ
கூப்பிடும் போதே
ஏங்க ஆரம்பித்துவிடுகிறது
இந்த மனசு...
போய்த்தொலையட்டும்
அதையும் கொஞ்சம்
கொஞ்சிவிட்டுப்போயேன்...


அய்யோ இது சமையல்
அறைங்க...
என சத்தம் போடுகிறாய்
அடிப்பாவி அதற்காக
ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு
அறையா வைக்கமுடியும்..??


உன்னைத் தொடக்கூடாது
எனத்தானடி சொன்னாய்...?
அப்புறம் இப்படி
காற்றை காதுமடல்களில்
ஊதி கிச்சு கிச்சு
மூட்டுகிறேன் என
எப்படிக்
குற்றப்படுத்தலாம் நீ..?


இனி உனக்கு
கிச்சு கிச்சு மூட்டமாட்டேன் போ...
உன் வெட்கத்தோடு
அழகான கூச்சமும் சேர்ந்து
கொண்டு என்னைக்
கண்டபடி கிறங்கடிக்கிறது..
என்னடி செய்வேன் ...?


எப்பப்பாத்தாலும்
உனக்கு அதே நினைப்புதானா
எனக் கேட்கிறாய்...
அப்படியெல்லாம்
இல்லை செல்லம்
அப்போ அப்போ
உன் நெனப்பும் வரும்
எனச்சொன்னால்
ஏண்டி என்னை
முறைக்கிறாய்..?


அய்யோ சும்மா
இருடா மருதாணி
கலைந்துவிடும்
எனப் புலம்புகிறாய்...
கவலைப்படாதே..
மருதாணியை எல்லாம்
கலைக்க மாட்டேன்
சரியாடி செல்லம்..?


இனி இரண்டு கைகளிலும்
மருதாணி வைத்துக்கொள்ளடி
உன் முந்தானையை
சரி செய்யத்தான் நான்
இருக்கிறேனே..


கல்யாணம் ஆனபின்பு நான்
சேலை மட்டும் தான்
கட்டிக்கொள்ள வேண்டுமா
என் ஏண்டி கேட்கிறாய்...
தேவையில்லை...
என்னையும்
கட்டிக்கொள்ளலாம்..



இரண்டு கைகளிலும்
நான் வைத்திருக்கும்
மருதாணி அழகாக இருக்கிறதாடா
எனக் கேட்கிறாயே
செல்லக்குட்டி
இரண்டு கைகளுக்குள்ளும்
என்னை வைத்துக்கொண்டால்
இன்னும் அழகாக இருப்பாய்
தெரியுமா..?

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வளையல்களின் சத்தம்

 

என் வளையல்களின் 

மாநாட்டில் 
அவன் 
கவன ஈர்ப்புத்தீர்மானம் 
ஒருமனதாய் 
இருமனதால் 
நிறைவேற்றப்பட்டது 
**
இனி உடைபடும் 
வளையல்களுக்காய் 
நீ வருந்தவேண்டாம் 
அவை இந்நேரம் 
மோட்ஷம் அடைந்திருக்கும் 
**
வளையல் 
ஏன்டா பிடிச்சிருக்கு?? 
உன் முத்தத்தின் 
சத்தம் மறைக்கும் 
ஆயுதம் என்பதாலா??
** 
என் உடையாத 
வளையல்களுக்கு 
முத்தம் தராதே 
உடைந்த 
வளையல்களின் 
சத்தம் தாங்கமுடியவில்லை
** 
உன்னிடமிருந்து 
உதிர்ந்து விழுந்த 
முத்தத்திற்கு 
மௌன அஞ்சலி 
செலுத்தின 
உடைந்த 
என் வளையல்கள்
** 
உன் மீது 
நான் கொண்ட 
காதலைப் போலவே 
கணக்கிலடங்காதவை 
நமக்காக உடைந்த 
என் வளையல்களும்
** 
'வலையல்' 
தப்புடா 
அது 
'வளையல்' 
ம்ஹீம் 
உன்னுடையது மட்டும் 
வளைந்திருப்பது அல்ல 
வலைவிரிப்பது.....

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

யாருக்கும் தெரியாமல்

உன்னை நேரில் பார்த்து
எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன
அதனால் என்ன
உன்னை நினைத்துப் பார்த்து
ஒரு நொடி கூட ஆகவில்லையே

*************************************

நீ அப்போது குடியிருந்த வீட்டை
ஒருமுறை இப்போது நான் பார்த்தேன்
பாவம்
என்னை மாதிரி உன் ஞாபகத்தோடு
இன்பமாய் வாழத் தெரியவில்லை அதற்கு

*************************************

ஆனந்தமாய்கூட
என் கண்கள் உன்னை நினைத்து
கண்ணீர் சிந்த விரும்பவில்லை
கண்கள் முழுவதும் நிறைந்திருக்கும்
உன் காட்சியில் ஒன்றே ஒற்றை
அந்தக் கண்ணீர் கரைத்துவிட்டாலும்
பார்க்கும் சக்தியை இழந்துவிடாதா
என் கண்கள்

*************************************

ஒரு குழந்தையைப்போல
உன் அப்பாவிடம் நீ
கொஞ்சி விளையாடியதை
நான் பார்த்ததும்
நாக்கைக் கடித்துக்கொண்டு
முகத்தைத் திருப்பிக்கொண்டாய்
எனக்கும் உன் அப்பாவுக்கும்
தெரியாமல்.
அதை நினைக்கும் போதெல்லாம்
நான்
முகத்தைத் திருப்பிக்கொண்டு
நாக்கைக் கடித்துக் கொள்கிறேன்
யாருக்கும் தெரியாமல்

*************************************

உன்னை நினைத்தபடி
ஓடும் பேருந்திலும் ஏறுகிறேன்
ஓடாத பேருந்திலும்
உட்கார்ந்துவிடுகிறேன்

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

இறைந்து கிடந்தன…

 
 

உன்னை நினைத்துக்கொண்டிருப்பதைப் போலவே
இனிப்பாய் இருக்கிறது.
நீயுமென்னை நினைத்துக்கொண்டிருப்பதாய்
நினைத்துக்கொள்வது!

*

இமைப்பொழுதிலும்
கவிதை எழுதுவேன்.
இமைப்பது நீயெனில்.

*

உலகின் பெண்களுக்கெல்லாம்
உனதுருவம் அமைந்துவிட்ட மாயக்கனவிலும்…
உன்னைக் காட்டிக்கொடுத்து சிரிக்கிறது,
உனது பார்வை!

*

நீ குடை விரித்ததும்
குடை சாய்ந்தது
மழை வண்டி!

*

இமை மூடிய கண்களில் அரைப்பார்வையுடன்
விரல் மூடிய உள்ளங்கையில் திருநீற்றுடன்
அடிப்பிரார்த்தனைக்காக நீ சுற்றிய
கோயில் பிரகாரமெங்கும் இறைந்து கிடந்தன…
சில கவிதைகள்!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Thursday, October 28, 2010

நீ...வரும் வரை!!!

 
 
அடித்து ஓய்ந்த மழைபோல
அமைதியாயும் அமைதியற்றும்
அமிழ்ந்து கிடக்கிறது என் வீடு.
சுவாசத்தைத் தவறவிட்டாலும்
இழுத்துப் பிடித்து
உன் வாசத்தை மட்டுமாவது
சேமித்து வைத்திருக்கிறேன்
நுரையீரலுக்குள்.

நுழைவாயில் தொடக்கம்
நூர்ந்து உறங்கும் மெழுகுதிரி வரை
துக்கம் உறைந்து கிடக்க
நானும் ஏதோ இருக்கிறேன்.
நீயும் சுகம்தானே!


உன் நினைவு நூல்களில்
பட்டம் விடுவதைத் தவிர
வேறு வழியில்லை
என்றாகி விட்டது என் நிலைமை.
அவலங்களின் நடுவில்
அன்பின் ஆழத்தை
இப்போதைக்குக் கண்டதாய்
ஞாபகம் இல்லை.
நான் என்னை நேசிப்பதை விட
என் நிழலைக் கூட
நீதானே நேசிக்கிறாய்.


நீ வந்து போனதன் பூரிப்பு எனக்குள்.
சொல்லாமலே களைகட்டிக்
காட்டிக் கொடுத்துவிடுகிறது
அடுத்தவர்களுக்கு.
நான் இந்த வாரத்தில்
மிக மிக அழகாய் இருகிறேனாம்.

எனக்குத் தெரியாமலேயே எனக்குள்
குடியிருக்கிறாய் பார்த்தாயா!
நீர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்
நீருக்குள்ளேயே வாழும்
சில உயிரினங்கள் போல.


தும்பியின் வாலில்
நூல் கட்டி விளையாடும் வயதில் வராமல்
பாவம் தும்பியைத் துன்புறுத்தாதே
என்கிற வயதில் அருகில் உறவாய் நீ.
வாழும் வயதைத்
தவற விட்டவளாய் நான்.
இனியும் விட்டு விடாமல்
யுகங்கள் தொலையும் வரை
இறுகப் பற்றியபடி.


நேற்றைய நிகழ்வுகள்
இன்றைய நினைவாக.
கடற்கரையில் உன் தோள் சாய்ந்ததும்,
தாராக்களோடு பேசியதும்,
வள்ளத்தில் தூண்டிலோடு போராடிய
அந்த மூன்று மனிதர்களுக்காகக்
கவலைப்பட்டதும்,
சிவந்த கண்களோடு
சூரியன் கடலுக்குள் மூழ்கிப் போனதும்.


இன்றும்...
அதே சூரியனும்...தாராக்களும்
வள்ளமும்...அந்த மனிதர்களும்
அப்படியேதான்
இன்றும் வந்து போவார்கள்.
உன் தோள் இல்லாத நான் மட்டும்
மீண்டும் தனிமைக்குள்.

காற்றின் வேகத்தோடு
பறக்கும் விமானத்துள்
கரைந்துவிடும் உன்னை
நினைவுக்கரையில் நின்று
வழியனுப்பி விட்டு
காத்திருக்கிறேன் மீண்டும்
நீ...வரும் வரை!!!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

முடியாத இரவொன்றில்...

 

மாட்டிய கயிற்றின் இடைவெளியில்
என் இறுதி மூச்சு.
அதுக்கும் எனக்குமான தூரம்
ஒன்றும் அதிகமில்லை.

முரண்பாடுகளோடுதான்
நேற்றைய கனவும்.
வாதாடிய முகம் நெருக்கமானதாய்
என் கையைப் பிடித்தே
என் குரல்வளை நெரித்தபடி அது.

முன்னைய இரவுகளிலும்
கனவுகள் கலைத்து
நானே என் கனவைக்
கலைத்துக்கொண்டதாய்
குற்றம் சுமத்தியுமிருக்கிறது.

வண்டாய் என் மகிழ்ச்சி குடைந்து
மண்ணுக்குள் புதைத்து,
சிரிப்பைப் பறித்து
திரும்பவும் எனக்கே
சில்லறைக்கு விற்பனை செய்து
சித்திரவதை செய்யும் சனியன் அது.

காற்றுப் புகவும்
கவிதை எழுதவும் கதவடைத்து,
அணிலும் குயிலும் கடித்த மாங்காயை
பறித்துண்ணவும் பழகியிருக்கிறது.

மனம் முட்டி எழுத நினைக்கையில்
எழுதுகோல் ஒழித்து,
கூரை தட்டி மழை தரும் கவிதை
தடுக்கும் பிசாசு.
இனியும்....
நான் இருக்கப் போவதில்லை இதனோடு.

தடுக்கமாட்டீர்கள்
நீங்கள் யாரும் என்னை.
ஏனென்றால்
நீங்களும் கூட்டுத்தானே அதனோடு.

யாரோ ஒரு கை என் கயிறறுத்து
சொல்லட்டும் நாங்களில்லை
அது உன்னோடு உறங்கும்
தாழ்வான எண்ணமென்று.
தொங்கியபின் பின்னால் சொல்வீர்கள்
அதுவும் எனக்குத் தெரியும் !!!


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

வரம் ஒன்று தா தாயே!....

 
 
நாட்கள் அலட்சியமாய்
அடுத்தவர்களைப் பற்றிச்
சிந்திக்காமலேயே நகர்ந்தபடி.
தவறவிட்ட
எத்தனையோ ஆசைகள்
தேவைகளைக் காவியபடி
கொஞ்சமாவது
மனச்சாட்சியே இல்லாததாய்.

மிகமிகத் தவறிய
உறவுகள் சொந்தங்கள்.
தவறினாலும்...
தேடிக்கொண்டேயிருக்கும்
உறவாய் பெற்றவர்கள்
அப்பா...அம்மா.

மாறாத ரணமாய்
புரையோடியபடி
அவர்களின் நினைவுகள்.
தேவையாயிருக்கிறது
அன்பும் ஆறுதலும் அரவணைப்பும்.

வானம் தாண்டிய அடுத்த எல்லையில்
நானும் நீங்களுமாய்.
நினைவு வரும்போதெல்லாம்
சுவரில் தொங்கும் நிழற்படத்தில்
கண் பதித்து நிலைகுத்தி
நிற்பது மாத்திரமே முடிகிறது.
வாழ்வின் அற்புதங்களாய்
மனதில் பரவிக் கிடக்கும்
வாடாத இரு மலர்களாய் நீங்கள்.

ஏங்கும் மனப்புகை கண்குழி பட்டு
ஆவியாகி கண்ணீராய்த் தெறிக்கும்.
கன்னம் நனைக்கும் கண்ணீர்
இரவை நனைக்கையில்
தலையணையையும் நனைத்தபடி.

சுற்றும் பூமியில் ஆயிரம் உறவுகள்.
இருந்தும்...
சுயநலமில்லா உறவு
உங்களுக்காய் காத்திருக்கிறேன்.
தளர்ந்துவிட்ட விரல்களின்
வருடலுக்காய்.
தலைகோதும் தழுவலுக்காய்.

அம்மா...அம்மா
ஆசையாய் இருக்கிறது
ஒரு முறை...
ஒரே ஒரு முறை
உருமாறிச் சிறிதாகும்
வரம் ஒன்று தா தாயே.
மீண்டும் கொஞ்சம் குடியிருக்க
உன் இருண்ட கருவறைக்குள்!!!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

Tuesday, October 26, 2010

இன்றைய இளைஞிகளின் டாப் 10 கனவுகள்


 

கனவு1

இங்கயும் முதல் கனவு மொபைல் தான் ஆனா ஒரு சின்ன வித்தியாசம் இவங்களுக்கு மொபைல் இவங்களே வாங்கிக்கிட மாட்டங்க.எல்லாம் தானா வரும் எப்பிடின்னா ஏமாந்த சோனகிரி என்னமாதிரி எத்தன பேரு இருக்காங்க தெரியுமா?....




கனவு2

காதலனோ பாய்ஃப்ரண்டோ யாரா இருந்தாலும் அவங்களோட இருசக்கர வாகனத்தில் துப்பட்டாவ மூஞ்சில மறைச்சபடி பயணிப்பது......




கனவு3

குட்டைய்யா இருக்குறவங்களுக்குன்னு தயாரிக்கப்பட்ட இந்த ஹைகீல்ஸை எல்லாரும் போட்டு நடக்குறது ...சிலர் கீழே விழுகவும் செய்றாங்க.....



கனவு4

காதுல வளையம் போடுறத மறந்துட்டு தொப்புளில் வளையம் போட்டுக்கிறது.....


கனவு5

உடை மாத்துறது மாதிரி காதலை தினமும் மாத்தி நாலைந்து பேரையாவது மெண்டல் ஆக்குவது.....




கனவு6

தெரியுமோ? தெரியாதோ? ஆனால் நாலு பசங்க அவங்கள கடக்கும்போது நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவது......




கனவு7

பியூட்டி பார்லர் போறோம்ன்னு சொல்லிட்டு பாக்குறவங்களயெல்லாம் பயமுறுத்துறது....



கனவு8

எல்லாரையும் திரும்பி பாக்க வைக்கிற மாதிரி? டிரஸ் போட்டுக்கிறது.....




கனவு9

கை கால்ன்னு ஒரு இடம் விடாம பச்சை குத்திக்கிறது....




கனவு 10

ஆசையா காதலிச்சவனை விட்டுட்டு ஆஸ்திரேலியாவோ இல்ல அமெரிக்கா மாப்பிள்ளையை கட்டிக்கிறது....


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

லிப்டுல போறது

 

லிப்டுல போறது சகஜமா நடக்குற ஒண்ணு, ஆனா பாருங்க தினமும் ஒரே மாதிரி போயி வந்துட்டு இருந்தா ரொம்ப போர் அடிக்கும். அதனால் அந்த பயணத்தை இனிமையாக்க என்ன செய்யலாமுன்னு யோசிச்ச பொழுது தோன்றியவை சில


1. ஏறின உடனே ஓடிப்போயி சுவற்றை பாத்து, சுவத்தை புடிச்சி நின்னுகோங்க. அடிக்கடி பின்னாடி திரும்பி நீங்க இறங்க வேண்டிய இடம் வந்துடிச்சான்னு பாக்குற மாதிரி பாத்து, எதையோ கண்டு பேய் அறைந்ததை போல சுவத்து திரும்பிகோங்க.


2. அடிக்கடி சே காத்தே இல்லை அப்படின்னு சொல்லி, எங்க போச்சி காத்து அப்படின்னு நீங்க வெச்சிகிட்டு இருக்குற பர்ஸ், பை முதலியவற்றில் தேடுங்க. கூட்டம் கம்மியாவும், அடி வாங்க தெம்பு அதிகமாகவும் இருக்கும் பொழுது பக்கத்துல இருக்குறவங்க பையிலையும் காத்து இருக்கான்னு செக் பண்ணிக்கலாம்.


3. உள்ளே வருபவர்களை கைக்குலுக்கி, வரவேற்று நான் தான் இந்த லிப்டின் COO(Chief Operating Officer) என்று அறிமுகப்படுத்தி, உங்களின் பயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் உங்களுக்கு ஏதேனும் தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ள 100ஜ டையல் செய்யவும், அப்படின்னு சொல்லுங்க.


4. லிப்ட் போயிட்டே இருக்கும் பொழுது பூனையை போல, நாயை போல சவுண்டு வுடுங்க.


5. புதுசா உள்ள வருபவரை ஒரு மாதிரியாக பார்த்து, என்ன ஒரு மாதிரியா கெட்ட வாசனை வருதுன்னு சொல்லி, நாங்க எல்லாம் சாக்ஸை துவச்சி போடுவோமாக்குமுன்னு சொல்லுங்க.


6. ஒவ்வொரு தளத்தை லிப்ட் அடையும் பொழுதும், "லிப்டை போல சவுண்டு விட்டு, நீங்கள் நான்காம் தளத்தை அடைந்து இருக்கீங்க" அப்படின்னு சொல்லி, அந்த தளத்தின் பெருமையை எல்லாம் விளக்கலாம். முடிந்தால் அங்க இறங்க முற்படுபவரை இழுத்து பிடித்து, ஒரு டூர் கைடு போல விளக்கினால் உங்களது அன்றைய பொழுது இனிமையாக கழியும்.


7. லிப்டுகுள்ள இருக்குற போனை எடுத்து ஹலோ பெப்சி உமாவான்னு ஆரம்பிச்சி உங்களுக்கு புடிச்ச பாட்டை கேளுங்க.ஆனா தயவு செய்து நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க மேடமுன்னு சொல்லிடாதிங்க, முடியலை அதை கேட்க கூட முடியலை.


8. என்னடா காத்தே வரலைன்னு சொல்லி அதுல இருக்குற "Stop" பட்டனை அழுத்துங்க.


9. நீங்க நிக்கிற ஏரியாவை சுத்தி ஒரு சின்ன வளையத்தை போட்டு, எங்க ஏரியா உள்ளே வராதேன்னு சொல்லுங்க.

10. உள்ளே யாருமே வராத பொழுது "டேய் அவன் தானே நீயி, உன்னைய வரவேணாமுன்னு சொன்னேனே ஏண்டா வந்த அப்படின்னு" சொல்லி அவரை உள்ள விடாதி மாதிரி ஸீன் போடுங்க.


11. லிப்டு ஒவ்வொரு தளத்துல நிக்கும் பொழுது அதை நிப்பாடி, லிப்டுல இருந்து ஓடிப்போயி தளத்துல இருக்குற ஏதையாவது ஒண்ணை தொட்டு மைபிரண்டு போல "மீ த பஸ்டுடூடூன்னு" சவுண்டு விட்டுகிட்டே லிப்டுக்குள்ள ஓடி வாங்க. இதை செய்யும் பொழுது ஒருவருக்கு மேல் இருப்பது நலம் அப்ப தான் ஒரு ரன்னிங்க ரேஸ் எபெக்டு வரும் (அப்படியே உங்க வேலை போனாலும் நீங்க மட்டும் தனியா வீட்டுக்கு போக மாட்டீங்க.).

12. லிப்டுக்குள்ள எல்லோரும் ஏறுறவரைக்கும் பொறுமையா இருந்துட்டு மூடப்போற சமயத்துல வேகமா நடந்தோ, ஓடியோ லிப்டுக்கிட்ட வாங்க. நீங்க ஏறப்போறீங்கன்னு நினைச்சு லிப்டை ஸ்டாப் பண்ணி, கதவை மூடாம இருப்பாங்க. கிட்டக்க போயிட்டு ஏப்ரல் ஃபூல்ன்னு சொல்லிட்டு ஓடிப்போயிடுங்க.

13. லிப்ட் கதவு திறந்த உடன் ஏற வருபவர்களிடம் லிப்ட் மேலே செல்வதாக இருந்தால், கீழே செல்வதாக மாற்றிச் சொல்லலாம்.

14. நீங்கள் லிப்டில் ஏறி இல்லாத ஒரு தளத்தின் பட்டனை அமுக்க சொல்லி பட்டன்கள் அருகே இருப்பவரிடம் சொல்லலாம்.

15. லிப்டில் ஏறி இது எக்மோர் போகுமா எனக் கேட்கலாம்

16. ரொம்ப கூட்டமாய் இருந்தால் ரொம்ப இருமத் தொடங்கினாலோ அல்லது வாந்தி வருவது போல் சப்தம் செய்தாலோ தாராளமாய் நிற்க இடம் கிடைக்கும்.

17. உள்ளே வரவங்களை ஒன்னு ரெண்டு மூணுன்னு எண்ணிட்டே இருக்கலாம்.

18. யாருக்காவது போன் பண்ணி(நெட்வொர்க் இல்லாட்டாலும்).."மாப்ளே,. இந்த லிப்ட்ல குண்டு வெடிக்க 1 நிமிஷம்தான் இருக்கு"ன்னு கிலி ஏற்படுத்தலாம்..

19. லிப்ட்ல நிறைய பேரு இருக்கும்போது நின்ன இடத்துலயே ஓட ஆரம்பிங்க. கேட்டா "ஜாக்கிங் கூட பண்ணமுடியாத அளவு இன்னிக்கு பிஸி"-னு ஃபில்ம் காட்டலாம்.

20. நெறய மாடிகள் இருக்கிற இடம்னா கூட இருக்கவங்ககிட்ட "இப்படித்தான் என் ஃபிரண்ட் இதே லிப்ட்ல போயிருக்கான்; ரிப்பேராயி பாதி வழில லிப்ட் நின்னுபோயி ஃபையர் இஞ்சின் காரங்க வந்து எல்லாரையும் காப்பாத்திட்டு இருக்கும்போது திடீர்னு லிப்டடு கயிறு அறுந்து போயி …. என்னமோ போங்க, அவன் நல்லநேரம் கை ரெண்டும் போனதோட தப்பிச்சிட்டான்"-னு சொல்லலாம்.

21. கூட இருப்பவர்கள் அவசரத்தில் இருக்கும்போது, செல்பேசியில் 'மச்சி, என்னா பார்க்கிங் லாட் வந்துட்டியா ? என்ன இன்னும் அஞ்சு நிமிஷம் ஆகுமா … சரி … சரி .. வா' என்றுவிட்டு லிப்டை நிறுத்தி வைத்து எல்லோரையும் பார்த்து ஜெண்டில்மேன் புன்னகையோடு 'இதோ என் ஃப்ரண்டு வந்துட்டே இருக்கான்', 'இன்னும் அஞ்சே நிமிஷம்தான்', 'இந்நேரம் பார்க்கிங் லாட்ல இருந்து ஆஃபீஸ் பில்டிங் உள்ள வந்துருப்பான்', 'ஒடி வந்துட்டு இருப்பான்', என்று ரன்னிங் கமெண்ட் கொடுத்துக்கொண்டே இருக்கலாம்.

22. உள்ளே ஒவ்வொருவராக நுழையும்போது 'அஜீரணக்கோளாறு உள்ளவர்கள் உள்ளே நுழையவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மீறுவோர், உயிரியல் ஆயுத பிரயோகத்திற்கான தண்டனைக்கு உள்ளாவார்கள்' என்று அறிவிக்கலாம்.

23. தங்கள் தளம் வரும்வரை மற்றவர்களை இழுத்து வைத்து "சாட் பூட் த்ரீ" விளையாடிக்கொண்டிருக்கலாம். (ரம்மி, மங்காத்தா என்று என்று இன்னும் விஸ்தரித்துக்கொண்டும் போகலாம், வரவேற்புக்குத்தக)

24. யாராவது அவங்க fலோர் நம்பர் அமுக்க சொன்னா, அமுக்குறமாதிரி/தேடறமாதிரி பாசாங்கு செய்யலாம், அவங்க fலோர் கடந்து போற வரைக்கும். இது அதிவேக லிப்டுக்கு மட்டும்.

25. வெளியே போறவங்களுக்கு வழி விட்ற மாதிரி பாசாங்கு பண்ணிகிட்டே, கபடி ஆடலாம். அவங்க புடிச்சு தள்ளிவிட்டு, மேலே ஏறி போறவரைக்கும்.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

சினேகிதியை வசீகரிக்க…

 

திடீர்னு நீங்க விரும்புகிற சினேகிதி எப்பவோ நீங்க சொன்ன அட்ரெஸ்ஸ வச்சு, "சும்மா இந்தப் பக்கமா வந்தேன், அப்படியே உங்க ஞாபகம் வந்ததுன்,"னு உள்ளே நுழைந்தால்..?

"இப்படியெல்லாம் சந்தர்ப்பம் வருமா?"ன்னு கேக்கக்கூடாது. சினேகிதி எல்லாம் எந்த நேரத்தில் வருவார்கள், எப்ப வருவாங்கன்னு தெரியாது. நமக்கு 11-ல் சுக்கிரன் இருந்தால், வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்து விடுவார்கள்!

அப்படி உள்ளே நுழைந்து விட்டால்..?

சரி.. நாம் அறையை எப்படி வைத்து இருக்க வேண்டும் என்று பார்ப்போம்!

1. அறையில் எங்காவது ஓர் இடத்தில் நீங்கள் செய்த மரத்தால், இல்லை ஐஸ் குச்சி, இல்லை மூங்கில் குச்சி வைத்து செய்த பொருளை மாட்டி வைக்கவும்!! (அட்லீஸ்ட் விளக்குமாத்துக் குச்சி!!!) இல்லையா நீங்க செய்தா எப்படி இருக்குமோ..? அதுக்குத் தோதா ஒன்னை வாங்கி வைங்க. எப்பவோ 12த் படிக்கும்போது செய்ததுன்னு அள்ளி விடுங்க!
அதை வச்சு ஒரு ஜோக்கூட அடிக்கலாம். "படித்து முடித்து வேலை கிடைக்கலைன்னா கை வசம் தொழில் இருக்கு" என்பது போல. நீங்க செல்ஃப் ஜோக் அடிச்சா ரசிப்பாங்க. மறந்து போய் அவங்களை வைத்து ஜோக் அடிச்சீங்க… சாப்டர் குளோஸ்!!!
2. இருவர் விளையாடும் வீடியோ கேம். வீடியோ கேம் குழந்தைங்க விளையாடுவதுன்னு நினைச்சா அதை மாத்திக்கங்க. இரண்டு பேர் சேர்ந்து ஆடி அவங்களையும் ஜெயிக்கவிடுங்க. அப்பத்தான் நீங்க ஜெயிக்கலாம். என்ன புரிந்து இருக்குமே!

3. நல்ல சமையல் அடுப்பு அவசியம் இருக்கணும். கன்னங்கரேல்னு ஒரு ஸ்டவ்வைப் பத்தவச்சீங்க.. நிலைமை மோசம்தான். ரெண்டு மூனு அயிட்டம் செய்ய்த் தெரிந்து வச்சுக்கோங்க. திடீர்ன்னு பிரெட் டோஸ்ட் மாதிரி ஏதாவது செய்து அசத்துங்க. அப்புறம் என்ன? உங்க ராஜ்ஜியந்தான்.

4. ஜிம்மிக்ஸ் வேலை செய்த உங்கள் போட்டோ ஆல்பம் (ஒரிஜினல் நாட் அட்வைஸ்ட்), டூர் ஆல்பம் (அதுல மேக்ஸிமம் லாங்க் ஷாட் தானே இருக்கும். உங்கள் குளோசப் கூடவே கூடாது!) ஆகியவற்றை டேபிளின் மேல் பார்வையில் படும்படி வைக்கவும். அவற்றின் மூலம் ஏகப்பட்ட விசயம் பேசலாமே.

5.சாக்கலேட் மில்க், பெப்ஸி, கோலா ஆகியவற்றை கொஞ்சம் வைத்திருங்கள். அந்த நேரத்துக்கு ஓடி அலையக்கூடாது. என்ன சரிதானே. கூலாக இருங்கள். ஹாட் டிரிங்ஸ்சை வெளிய எடுத்திடாதீங்க. அந்த பாட்டில்கள் கண்ணில் படாமல் இருக்கட்டும்!

6. நீங்கள் சென்ற இடங்களின் போட்டோக்களை பெரிதுபடுத்தி காலேஜ் நோட்டீஸ்போர்ட் போல கொலாஜ் பாணியில் சுவற்றில் ஒட்டி அலங்கரித்து வைங்க. மொத்தமும் பார்த்தா ஒங்க டூர் மொத்தமும் ஞாபகம் வரணும். போன இடம் வந்த இடம் என்று ஏகப்பட்ட விசயங்கள் பேசலாம், கடலை இழுத்துக்கொண்டே போகும்.

7. பெண்களுக்கு செல்லப் பிராணிகள் என்றால் ரொம்பப் பிடிக்கும். நாய், பூனை போல. நாய், பூனை இல்லைன்னா மீன் தொட்டியாவது சின்னதாக வைத்து விடுங்கள். இதெல்லாம் பார்த்தா பெண்கள் உங்களை பொறுப்பானவர் என்று நினைப்பார்களாம்.

8. எதாவது இசைக்கத் தெரியுமென்றால் நீங்க பாஸ். தெரியாதா? இப்போதிலிருந்தே ஏதாவது ஓர் இசைக்கருவியை எப்படியாவது கற்றுக்கொள்ளுங்கள். கிடார் மாதிரி ஒன்னைக் கண் படும் விதத்தில் வைக்கவும். வாசிக்கலைன்னாலும் அதைக்கையிலெடுத்துப் பார்ப்பார்கள் பாருங்க. அப்புறம் என்ன? அசத்தல்தான்!

என்ன பேச்சிலர்ஸ் ரெடியா?

இவ்வளவு திறமையும் ஏற்கெனவே இருக்கு பாஸ்ன்னா ஓக்கே!!!

இல்லைன்னாலும் பரவாயில்லை… ஆரம்பிங்க இப்போதிருந்தே!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

இப்படி இருந்தால் நிச்சயம் நீங்கள் தமிழன்தான்..!

1. எந்தப் பொருள் வாங்கினாலும், ரொம்ப நாளைக்கு அதைச் சுத்தி இருக்கற ஜவ்வு பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க..!

2.
உங்க சமையலில் உப்பு, புளி, மிளகாய் சேராமல் எந்த உணவும் இருக்காது..!

3.
உங்களுக்கு வந்த அன்பளிப்புப் பொருட்களில், பால் குக்கரும், அஜந்தா சுவர்க் கடிகாரமும் நிச்சயம் இடம்பிடிச்சிருக்கும்..! ரொம்பப் பேரு தங்களுக்கு வந்ததை அடுத்தவங்க தலையில் [அன்பளிப்பாதான்] கட்டிவிட திட்டம்போட்டுகிட்டு இருப்பாங்க..!

4.
வெளிநாட்டுக்குப் போயிட்டு வந்தீங்கன்னா, ஒரு மெகா சைஸ் சூட்கேஸோடதான் ஊருக்குத் திரும்புவீங்க..!

5.
எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் 1 மணி நேரம் தாமதமாப் போவீங்க. அதுதான் சரியா இருக்கும்ன்னு மனசார நம்புவீங்க..!

6.
மளிகைப் பொருட்களின் பாலிதீன் உறைகளை பத்திரமா எடுத்து வைப்பீங்க. பின்னாடி உதவும்ங்கற தொலைநோக்குப்பார்வையோடு..!

7.
உங்களுக்கு வரும் கடிதங்களில் எல்லா ஸ்டாம்பிலும் சீல் விழுந்திருக்கான்னு பார்ப்பீங்க. தப்பித்தவறி சீல் விழாமஇருந்தா, அந்த ஸ்டாம்பை கவனமா பிரிச்சு எடுத்து எங்கேயாவது வச்சுட்டு, அப்புறம் சுத்தமா மறந்துடுவீங்க.

8.
சினிமா தியேட்டரோ, விரைவுப் பேருந்தோ.. இருக்கையின் இருபக்க கை வைக்கும் இடத்துக்கும் சொந்தம்கொண்டாடுவீங்க..!

9.
ரெட்டைப் பிள்ளைகள் இருந்தா, ஒரே மாதிரி ட்ரெஸ் தச்சுக் கொடுப்பீங்க. ரைமிங்கா பேர் வைப்பீங்க.. [ரமேஷ், மகேஷ்.அமிர்தா,சுகிர்தா..]

10.
.சி. திரையரங்குன்னா முட்டை போண்டா எடுத்துட்டுப் போய் நாறடிப்பீங்க.. .சி. கோச்சுன்னா, கருவாட்டுக் குழம்பைகீழே ஊற்றி கப்படிக்க வைப்பீங்க.!

11.
விமானமோ, ரயிலோ, பஸ்ஸோ... ஒரு கும்பல் வந்து ஏத்திவிடணும்ன்னு எதிர்பார்ப்பீங்க..!

12.
புதுசா கார் வாங்கினா, அதுக்கு மணப்பெண் அலங்காரம் பண்ணிதான் எடுத்துட்டு வருவீங்க..! கொஞ்ச நாளைக்கு சீட்பேப்பரைக் கிழிக்கவே மாட்டீங்க.. நம்பர் எழுதறீங்களோ இல்லையோ.. கொலைகார முனி துணைன்னு ஸ்டிக்கர் ஒட்டமறக்கவே மாட்டீங்க..!

13.
செல் போனோ, டி.வி.ரிமோட்டோ.. லாமினேஷன் செஞ்சாதான் உங்களுக்கு நிம்மதி..!

14.
அடுத்த பிள்ளைகளைப் பாரு.. எவ்வளவு சாமர்த்தியமா இருக்காங்கன்னு.. என்று உங்க பெற்றோர் சொல்லாமஇருக்கவே மாட்டாங்க.. அடுத்த பெற்றோரைப் பாருங்க.. எவ்வளவு ஜாலியா செலவழிக்கறாங்கன்னு நீங்க நெனைப்பீங்க..ஆனா சொல்ல மாட்டீங்க..!

15.
உங்க வீட்டு ஃபிரிட்ஜ்ல, சின்னச் சின்னக் கிண்ணங்களில், 3 மாசமா தயாரிச்ச குழம்பு, கறி வகையறா இருக்கும்..!

16.
உங்க சமையலறை அலமாரியில் காப்பித்தூளுக்கு இலவசமா வந்த பெட் ஜாடி குறைஞ்சது ரெண்டு மூணு இருக்கும்..!

17.
அதிகமா உபயோகிக்கப்படாத பொருள் உங்ககிட்ட அவசியம் நாலைஞ்சு இருக்கும். [-ம். பிரஷர் குக்கர், காப்பி மேக்கர்,வாக்குவம் கிளீனர், பிரெட் டோஸ்ட்டர், மைக்ரோ வேவ் அவன், கேஸ் அடுப்புல க்ரில் இப்படி..]

18.
பொங்கல், தீபாவளின்னா வீட்டுல சந்தோஷமா விழுந்து கெடக்க மாட்டீங்க.. தண்ணியைப் போட்டுட்டு, தகராறுபண்ணி,போலீஸ்-ஸ்டேஷன்ல குத்தவச்சுருப்பீங்க..!

19.
கல்யாணத்துக்கு ஊர் பூரா பத்திரிகை வச்சு கலெக்ஷன் பார்ப்பீங்க..

20.
இந்த விவரம் உங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்.. உடனே உங்க நண்பர்களுக்கு அனுப்பணும்ன்னு கை பரபரக்கும்..


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.