Followers

திருக்குறள்

Saturday, August 25, 2012

பெண்களை குஷிப்படுத்தும் பரிசுகள்!

குடும்ப உறவுகள் என்பது நமக்கு அன்பையும், பாதுகாப்பையும் சமூக அந்தஸ்தையும் தரக் கூடியது. இந்த உறவுகள் அருகில் இருக்கும்போது அதன் அருமை பலருக்கும் புரிவதில்லை. கோப தாபங்களுடன் சற்று விலகும்போதுதான் அது தரும் வெறுமையை உணர்வார்கள்.

நம்மைச் சுற்றியிருக்கும் உறவுகளை அரவணைத்து செல்வது என்பது பெரிய விஷயம். ஆனாலும் அதை செய்துதான் ஆகவேண்டும். அதிலும் குறிப்பாக குடும்ப உறவுகளை பாதுகாப்பது என்பது நம்முடைய கடமைகளில் ஒன்று. ஏதோ ஒரு சமயத்தில் எதற்காகவோ நம்மையும் அறியாமல் பேசிவிடும்போது உறவுகள் சிதைக்கப்படுகின்றன. அப்போது மற்றவர்களின் மனதில் அவநம்பிக்கை ஏற்படுகிறது. நாளடைவில் அது விரிசல் அடைந்து குடும்ப உறவுகளை பாதிக்கிறது.

`இப்படி விரிசல் அடைந்த உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்ளவும், நெருக்கமாக இருக்கும் உறவுகள் விரிசல் ஆகாமலும் இருக்க பிறந்தநாள், திருமணநாள் மற்றும் மதம் சார்ந்த கொண்டாட்டங்கள் கைகொடுக்கும்' என்கிறார் கள், மன நல ஆலோசகர்கள்.

அந்த நாட்களில் உறவினர்கள் ஒன்று சேரும்போது, உறவுகள் புதுப்பிக்கப்படுகின்றன. அந்த தருணங்களில் பரிமாறிக்கொள்ளப்படும் பரிசுகள் நாம் அவர்களை நினைவில் வைத்திருக்கிறோம்- அவர்களை முக்கியமானவர் களாக கருதுகிறோம் என்பதற்கு அத்தாட்சியாகிறது.

சிலர் வயதாகிவிட்டதால் பிறந்த நாள் கொண்டாட்டம், திருமண நாள் கொண்டாட்டம் போன்றவை அவசியம் இல்லை என்று நினைக்கிறார்கள். வயதான பிறகு கொண்டாடுவதுதான் ஆத்மார்த்தமான உறவுகளை இணைக்கும் பாச நிகழ்வுகளாக இருக்கும்.

வயதில் பெரியவர்களின் உணர்வுகளை எல்லோரும் புரிந்துகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அந்த குற்றச்சாட்டுகளை தவிர்க்க அவர்களுக்காகவாவது கொண்டாட வேண்டும். அத்தகையை சந்தர்ப்பங்களை நழுவவிட்டு விடாதீர்கள்.

பிரபலங்கள் கொண்டாடும் பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கும், சாதாரணமானவர்கள் கொண்டாடும் நிகழ்ச்சிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. பிரபலங்கள் மக்களை கவரவும், தங்களை விளம்பரப் படுத்திக்கொள்ளவும் அதனை பயன்படுத்திக் கொள்கிறார்கள். சிலர் அப்போது பணத்தையும் வசூலித்துவிடுகிறார்கள். அவற்றை யெல்லாம் கூட நியாயப்படுத்திப் பார்க்கும் மக்கள் வீட்டிலுள்ள உறவுகளின் பிறந்த நாளை கொண்டாடுவது வீண் செலவு என்று நினைக்கிறார்கள்.

கொண்டாட்டங்களில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் கருவியாக இருப்பது பரிசுகள். ஒருவரை குதூகலப்படுத்தவும், அவர்களை நாம் முக்கியமானவராக கருதுவதை தெரியப்படுத்தவும் பரிசுகள் உதவுகின்றன. பரிசு சிறியதாக இருந்தாலும் அது பெரிய அளவில் அன்பை வெளிப்படுத்தும். பரிசுகள் மூலம் அன்பு அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டால்தான் மன வேற்றுமைகள் உருவாகாமல் இருக்கும். ஒற்றுமை வலுப்படும்.

இப்போதெல்லாம் பரிசுப் பொருட்களுக்கென்றே தனியாக கடைகள் வந்துவிட்டன. அந்த அளவுக்கு மக்கள் பரிசுப் பொருட்களை வாங்குகிறார்கள். எல்லா கொண்டாட் டங்களுக்கும், எல்லா வயதினருக்கும் விலைக்கு தகுந்தபடி பரிசுப் பொருட்கள் கிடைக்கின்றன. நம் மனதிற் கேற்றதை வாங்கி மற்றவர்களை மகிழ்விக்கலாம்.

மற்றவர்களை மகிழ்விப்பது என்பது தேவ குணங்களில் ஒன்று. அத்தகையை குணம் நம்மிடம் இருக்குமானால் எல்லா நலன்களும் நமக்கு கிட்டும் என்கிறது வேதம். அது உண்மைதான். அப்படிப்பட்ட தருணங்களை நாம் ஏற்படுத்திக் கொண்டு குடும்பத்தில் மற்றவர்களை மகிழ்விக்க வேண்டும்.

`ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளுங் கள். அது உங்கள் வாழ்க்கையை அலங்கோலப் படுத்தி விடும். உங்களை கடனாளிகளாக்கி விடும்' என்று காந்திஜி ஒரு அரங்கில் பேசிய போது, அதைக் கேட்டு அன்னிபெசன்ட் அம்மையார் உள்ளிட்ட சிலர், அந்த அரங்கில் இருந்து வெளியேறிவிட்டார்கள். அவர் தங்களை மையப்படுத்தி பேசுகிறார் என்று கோபித்துக் கொண்டனர். ஆனால் காந்திஜி இன்னொரு மேடையில், `குடும்பம் குதூகலமாக இருக்க நட்பு நலமாக இருக்க உங்களால் முடிந்த பரிசுகளை மற்றவருக்கு வழங்கி பெருமைப்படுத்துங்கள். அது உங்கள் அன்பின் வெளிப்பாடு. அந்த பரிசு உள்ளவரை உங்கள் அன்பை அது மற்றவருக்கு வெளிப்படுத்திக் கொண்டிருக்கும். அது உங்கள் பூசல்களை தவிர்த்து உறவை சந்தோஷப் படுத்தும் சக்தி படைத்தது' என்று கூறினார்.

அவர், பரிசுப் பொருட்களின் பெருமையை வெளிப்படுத்தியதோடு அது ஆடம்பர செலவல்ல என்றும் கூறியிருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் அன்போடு அவருக்கு தரப்பட்ட பரிசுப் பொருட்களை அது எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும் அதை பாதுகாத்து அன்பை கவுரவப்படுத்தியிருக்கிறார்.

நாம் பலர் மத்தியில்வைத்து ஒருவருக்கு பரிசு வழங்கும்போது, பலரது பார்வை நம் மீது விழுகிறது. அது நமக்கு ஒரு சமூக அந்தஸ்தையும் பெற்றுத் தருகிறது. மேலும் பரிசுகள் மற்றவர்கள் ஆசைப்பட்ட பொருளாகவோ, அவர்களுக்கு தேவைப்படும் பொருளாகவோ இருந்துவிட்டால் அதன் மகிழ்ச்சி பல மடங்காக பெருகிவிடும்.

பரிசுப் பொருட்களின் சிறப்பு என்னவென்றால் அதை நாம் நினைக்கும்போது உடனே தர முடியாது. அதற்கென ஒரு தருணம் வரும்போது கொடுத்து மகிழ்வதுதான் முறையாகும். வாழ்க்கையில் அத்தகைய தருணங்களை நாம் பயன்படுத்திக்கொள்ள சில விசேஷ நாட்களை நாம் அனுசரிக்க வேண்டியிருக்கிறது.

பண்டிகைகள் என்பது பொதுவாக மகிழ்ச்சியை தரக்கூடிய நாட்களாக இருந்தாலும் அத்தகைய தருணங்களிலும் பரிசுகளை பரிமாறிக் கொள்ளலாம். அந்த மகிழ்ச்சியான நாட்களை நாம் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள அந்த பரிசுகள் உதவும். பரிசுப் பொருட்கள் ஆடம்பரத்தை வெளிப்படுத்தக் கூடிய ஒன்றாக இல்லாமல் அன்பை மட்டுமே வெளிப்படுத்துவதாக இருந்தால் போதுமானது.

குடும்ப மகிழ்ச்சிக்காக நாம் எவ்வளவோ கஷ்டப்படுகிறோம். எவ்வளவோ உழைக்கிறோம். ஆனால் அவ்வளவு செய்தும் மகிழ்ச்சி ஏதோ ஒரு இடத்தில் தடைப்பட்டு நின்று விடுவதுண்டு. அத்தகைய நேரங்களில் இந்த அன்பு பரிசுகள் இழந்த மகிழ்ச்சியை மீட்டு கொடுக்கும்.

குடும்பத்தாரின் முக்கியமான நாட்களை கொண்டாடி பரிசு வழங்குவது என்பது குடும்ப மகிழ்ச்சிக்கு நல்ல வழிகாட்டி. நல்ல குடும்பத்தை வடிவமைக்கவும் இந்த எளிய முறை பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் பரிசுக்கு ஏங்குவார்கள். அவர்களை குஷிப்படுத்து வதற்கென்றே நிறைய பரிசுகள் உள்ளன. பெண்களை புரிந்துவைத்திருப்பவர்கள், அவர்களுக்கு என்ன பரிசுகள் பிடிக்கும் என்பதையும் தெரிந்துவைத்திருக்கவேண்டும்.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.