Followers

திருக்குறள்

Monday, October 18, 2010

இடம் பெயர்தல்


தொழுவத்தை இடித்து
ஒரு அறை வேண்டுமெனக்
கேட்டதால்
அடிமாட்டிற்கு விற்றுவிட்டு
அறை உருவாக,
கம்ப்யூட்டரும் நானும்
அவ்வறையில் ஒடுங்கினோம்.

 

அம்மாவுக்கு தான்
எதையும் பேச
யாருமே இல்லாது போனார்கள்.

தாமிரபரணியில் குளித்த தேகமென
அவ்வப்போது அலுத்துக்
கொள்கிறாள் கிழவி.


இப்போதும் ஊரிலிருந்து
கருப்பட்டியும் அப்பாவுக்கு பீடிக்
கட்டுகளும்
அனுப்பிக்கொண்டிருக்கிறார்
பெருமாள் சித்தப்பா.

 

கருப்பட்டி காப்பியில்
பொட்டுக்கடலை பொட்டுக்
குடிக்கிறபோதெல்லாம்
ஊர்கதைகளைப் பேசத்
தவறுவதில்லை கிழவி.

 

தனது பாம்படத்தைக் கழற்றி
எப்போதாவது சுத்தம் செய்கையில்
பீத்திக்கொள்வாள்,
அவளது கலியாணத்தில்
போட்டதென.

 

மேலுக்கு முடியாமல் கிடந்தபோது
தனது பாம்படத்தை அம்மாவிற்குக்
கொடுத்தபடியே இறந்துபோனாள்.

 

நா பெத்த மக்கா – யென
வாரியணைத்துக் கொஞ்சுகிற
கிழவி
போனதிலிருந்து
வீட்டில் யாரும் பேசுவதே
இல்லை
ஊரைப் பற்றி.


மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.