மக்கிச் சிதைந்த
சாளரங்களின்வழி
தரையெங்கும்
பரவியிருக்கிறது,
மவுனமாய் கசிந்த ஒளி,
சிதிலமடைந்த
கதவொன்றில் சிரித்தபடி
விளக்குடன்
வரவேற்கும்
செதுக்கப்பட்ட பதுமை!!
சிலந்தி வலைகளின்
பிடியில் உத்தரத்தில் தொங்கும்
என்றோ தொங்கவிடப்பட்ட
விளக்குகள்!
பூட்டப்பட்ட
சயன அறைக்குள்
பல சந்ததிகளின்
சூட்சுமம் பொதிந்த
பழைய கட்டில்!
இருளின் ஆழத்தில்
பாசிகளால் மறைக்கப்பட்டு,
சலனமற்றுக் கிடக்கிறது
இறைக்கப்படாத
தண்ணீர்,
காற்றின் அந்தரங்கங்களில்
கலந்து கிடக்கும்
என்றோ ஒலித்த
தாலாட்டு!
பூக்களைக் கொட்டியபடி
வாசலில் நிற்கும்
பூவரச மரம்,
தொங்கிக்கொண்டிருந்த
குருவிகளின் திசையறியாது,
வண்டு துளைத்து
மெலிந்த
தோட்டத்து ஒற்றை
மாமரம்!
கடந்துபோன
எச்சங்களின் நினைவைச்
சுமந்து கிடக்கும்
வண்டிப்பாதை!!
அரசமர இலைகளின்
சலசலப்பில்
சிதிலமடைந்த
செங்கற்களின் நடுவே
அமைதியாய்
காத்து நிற்கும் குலசாமி!
| மறுமொழிப்பெட்டி: | ||
Loading... | ||
No comments:
Post a Comment