Followers

திருக்குறள்

Friday, February 11, 2011

நிதமும் தோற்கிறேன் நான்

எப்படித் தொடங்குவது ?
வரப்போகும் பிரளயத்திற்கான
எந்த அறிகுறியும் இன்றி
மிக இயல்பாய் நிகழ்ந்தது
நம் முதல் சந்திப்பு .

ஏனென்று அறிந்திருக்கவில்லை
ஏனோ தவிர்க்க நினைத்தேன்
உதவி கோரி நிகழ்ந்தது
முதல் அழைப்பு .

நல்ல விஷயங்கள் பரிமாறிக் கொள்வோம்
அமைதி உடன்படிக்கையுடன் தொடங்கியது
யுத்தத்துக்கான முதல் பரிமாற்றம்
உன்  குறுஞ்செய்தியுடன் .

பார்க்கவேண்டுமென  திட்டமிடவில்லை
உன் எல்லைவந்து பார்க்காமல் போனதில்லை
பார்வையின் எல்லைகடந்து
ஏதோ நிகழ்வுகள் இதயப்பேழையில்.

இனிப்புகள் பரிமாறிக்கொண்டோம்
இதயக்கசப்புகளை இனிப்பா மறைக்கும் ?
மனதின் இருளறைகள் மெதுவாய்த்திறந்ததில்
இருவர் மனதிலும் ஒளி பிறந்தது .

இணைவோம் என எண்ணவில்லை
இணைந்தோம் .
பிரிவோம் எனத்தெரிந்தே !
இணைந்த பின் பிரிந்தோம் .

மீண்டும் இணைய நினைக்கிறோம்
பிரிவதற்கான உடன்பாட்டுடன்.
நமக்குள் இணைவு என்பதற்கான பொருள்
இருவர் கண்களும் சந்திக்கும் அந்த நொடியுடன் முடிந்துபோகிறது .

பிணைந்து கிடக்கும் மனங்கள் மட்டும்
இணைவு பிரிவு அனைத்தும் கடந்து யுகமாய் நீள்கிறது
என்ன உறவு இது ?
தொலைவுகள் கூடினால் தூரங்கள் தூர்ந்துபோகிறது ?

உனக்காய் வைக்கும் முற்றுப்புள்ளிகள்...
தொடர்ந்து முற்றும் ஆனது...
முடிவு பெறுவதில்லை
முயன்றாலும் முற்றுப் பெறா நினைவுகளுடன்
உனக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்து ...
நிதமும் தோற்கிறேன் நான்.

-
சசிகலா
 திருப்பூர்
மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.