`நல்லதுக்கு காலமில்லே'. `யாரையும் நம்ப முடியலே'. இத்தகைய புலம்பல்கள் அதிகரித்துவிட்டன. அவ்வளவு ஏமாற்றங்கள் ஒவ்வொருவருக்கும் நிகழ்கிறது. ஏமாந்த பிறகு மனம் தாங்குவதில்லை. நெருக்கமான உறவுகளால் சாதுரியமாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற வேதனையின் வெளிப்பாடுதான் புலம்பல். இப்படி மற்றவரால் நீங்கள் ஏமாற்றப்படாமல் தவிர்க்க என்ன செய்யலாம், ஏமாற்றுப் பேர்வழிகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது?
***
ஏமாற்றுபவர்கள் தங்கள் பழக்க வழக்கங்களின் மூலம் சில அறிகுறிகளை வெளியிட்டு, தான் பிரச்சினைக்குரிய மனிதர் என்று அவர்களை அறியாமலே அடையாளங்காட்டுவார்கள். அந்த அறிகுறிகளில் சில…! உள்மனதில் ஒருவர் உங்களுக்கு அடிக்கடி தொல்லை அளிப்பதாக உணர முடிந்தால் அவரது செயல்களில் கூடுதல் கவனம் வையுங்கள். அவர்களின் கவனமும், பேச்சும் குறிப்பிட்ட விஷயம் சார்ந்ததாகவே இருக்கும். அவர்கள் குற்ற உணர்ச்சியுடனும், விலகிச் செல்வதையும், தட்டிக்கழிப்பதையும் வழக்கமாக கொள்வார்கள்.
***
வஞ்சகம் செய்பவர்கள் தங்கள் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். தோற்றமும் மெல்ல மெல்ல மாறிவரும். ஏமாற்றுபவர் வீட்டில் குறைவான நேரத்தையே செலவிடுவார். உங்களுடன் ஒன்றாக செலவிடும் நேரம் மிக குறைவாகவோ அல்லது மிக அதிகமாகவோ இருக்கும். கணவன்- மனைவிக்குள் உறவுகள் குறையும். நீங்களாக பேச அழைத்தால் கொஞ்சம் வேலை இருப்பதாக கூறியோ அல்லது இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்லியோ நழுவிவிடுவார். இப்படிப்பட்டவர்களை நம்பினால் என்றாவது ஒருநாள் ஏமாற நேரிடும்.
***
ஏமாற்றுபவர்கள் அறிவீனமான செயல்களைச் செய்வார்கள். ஒத்துவராத புதிய முடிவுகளை எடுப்பார்கள். நிறைய விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்பார்கள். சிறு வேலை கொடுத்தாலும் அளவுக்கு அதிகமான நேரம் எடுத்துச் செய்வார்கள். அதிலும் பல குற்றம் குறைகள் இருக்கும். காரணம் கேட்டால் பலமுறை மன்னிப்புக் கேட்பதுடன், முன்னுக்குப் பின் முரணான காரணங்களை சொல்வார்கள். தங்கள் தவறுகளை மறைப்பதற்காக அதிகமாக பேசிப் பூசி மெழுகுவார்கள்.
***
அதிகமாக பேசிக் கொண்டு விமர்சிப்பதும், விளக்கமளிப்பதுமாக இருப்பவர்கள் ஏமாற்று பேர்வழிகளாக இருக்கலாம். உங்களின் சிறு தேவையைக்கூட நிறைவேற்றவும், உங்கள் அன்பைப் பெறவும் அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். ஆனால் எல்லாமே அவர்களின் தேவை கருதியதாக இருக்கும். அவரது எதிர்பார்ப்பு உங்களால் நிறைவேறாது என்று தெரிந்தாலோ, உங்களை எளிதாக ஏமாற்றிவிட முடியும் என்று அறிந்தாலோ சதி வேலையைத் தொடங்கிவிடுவார்கள். இவர்கள் மீது எப்போதும் ஒருகண் வைத்திருங்கள்.
***
ஏமாற்றுபவர் திடீரென்று தனது நண்பர், தனக்கு கீழ் பணிபுரிபவர் பற்றி பேசத் தொடங்குவார். அப்போது அவர்களைப் பற்றிய வேடிக்கை விஷயங்கள், தாங்கள் நழுவிய விதங்களை பற்றி விவரிப்பார். அவர்களுடன் சேர்ந்து செய்த ஏமாற்று வேலைகள் பற்றியும் தன்னை மறந்து குறிப்பிடுவார். இதை நீங்கள் சரியாக புரிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது அபாயமான கட்டமில்லை என்றாலும் இதற்கு அடுத்த நிலை உங்களுக்கு `ஆப்பு' வைப்பதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
***
செல்போன் மற்றும் கணினி பற்றிய விஷயங்களை உங்களிடம் தர மறுப்பவர்கள் பித்தலாட்டம் செய்பவர்களாக இருப்பார்கள். அவருக்கும், உங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருந்தாலும் அவர்கள் உபயோகப்படுத்தும் `பர்சனல்' செல்போன் எண்ணை உங்களுக்குத் தரமாட்டார். அதுபோல அவரைப்பற்றி அவசியமாக அறிந்து வைத்திருக்க வேண்டிய கணினித் தகவல்களும் உங்களுக்கு கிடைக்காமல் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துவார். இப்படிப்பட்டவர்களிடம் உங்கள் பர்சனல் தகவல்களை கொடுத்துவிட்டு அவதிப்படாதீர்கள்.
***
வளர்ந்துவிட்ட தொழில்நுட்ப சாதனங்களை அதிகமாக பயன்படுத்துபவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளாக இருக்கிறார்கள். ஹேக்கர்ஸ், வைரஸ் பரப்புவோர் எல்லாமே இந்த ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் தாங்கள் பயன்படுத்திய இணையதள விவரங்களை மற்றவர் பார்க்காத வண்ணம் அழித்துவிடுவார்கள். அதே நேரத்தில் உங்கள் விவரங்களை முழுமையாக அறிந்து கொள்ளும் வழிகளையும் செய்து வைத்திருப்பார்கள். இவர்களிடம் நீங்கள் சிக்கினால் பேராபத்தை சந்திக்கலாம். எனவே தொழில்நுட்ப (திருட்டு) நிபுணர்களிடம் உஷாரா இருங்க.
***
புதுவிதமான உடல் அசைவுகளை வெளிப்படுத்துவதுதான் ஏமாற்றுப் பேர்வழிகளின் முக்கிய அடையாளமாகும். அவர்கள் கைகளை கட்டிக்கொண்டு நிற்பார்கள். எப்போதும் உங்களிலிருந்து சிறிது தூரம் விலகியே நிற்பார்கள். பேசும்போது கூட திரும்பிக் கொண்டு நிற்பார். உதடுகளை உம்மென்று வைத்து, கண்களால் குறுகுறுவென்று பார்ப்பார்கள். ஒன்றாக பயணிக்க நேர்ந்தால் மிகவும் பதட்டமடைவார். இப்படி அறிகுறிகள் உடைய நபர் உங்கள் அருகில் இருந்தால் கவனமுங்க கவனம்!
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment