கண்ணோடு காண்பதெல்லாம் காதலாகி விடாது. பார்த்த மாத்திரத்தில் வந்து விடுவது காதலும் இல்லை. `சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை...' என்று கவிஞர்கள் உருகி உருகிப் பாடியதெல்லாம் இன்றைய காதலர்களுக்குப் பொருந்தவே பொருந்தாது.
இன்றைய தலைமுறை முதல் பார்வையை பெரும்பாலும் `இவர் எப்படி' என்பதை எடை போட மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். அடுத்தடுத்த தற்செயலான, அல்லது தற்செயல் மாதிரியான திட்டமிட்ட சந்திப்புகள் அவர்களிடம் ஒருவித பிடிப்பை ஏற்படுத்தலாம். இதில் பிடித்தாலும், பிடிக்காத மாதிரி நடிப்பவர்கள் பெண்கள் தான். இதனால் தான் ஆண்கள் தங்கள் காதலை சொல்ல அத்தனை அலைச்சல்களுக்கு ஆளாகிறார்கள். அதற்குள் பல இரவுகள் தூக்கம் தொலைக்கிறார்கள். பாலிருந்தும் பழமிருந்தும் பசியாற மறக்கிறார்கள்.
சரி, இருக்கட்டும். இப்படியெல்லாம் போராடி ஒருவழியாக காதல் மகுடத்தை கைப்பற்றி விட்டார்கள் என்றே வைத்துக் கொள்வோம். இந்தக் காதலை கல்யாணம் வரை கொண்டு போக எத்தனை பேரால் முடிகிறது? சின்னச் சின்ன ஊடல்கள், கொஞ்சம் கோபம் என்று காதல் காலத்தை கார்காலமாய் நகர்த்துகிறவர்களுக்கு மத்தியில், நிஜமாகவே சண்டை போட்டு காதலை அவசரமாய் கல்லறைக்கு அனுப்பி விட்டு அதேவேகத்தில் இன்னொரு வரை தங்கள் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்கிறவர்களும் இருக்கவே செய்கி றார்கள். அதுவரை எதுவுமே நடக்காதது போல் புது வாழ்வு காணத் தொடங்கி விடுகிறார்கள்.
தேவதாஸ் கால காதல்கள் அப்போதெல்லாம் `அடைந்தால் மகாதேவி... இல்லையேல் மரணதேவி' என்பதாக மட்டுமே இருந்தன. இதனால் தான் `உலகே மாயம் வாழ்வே மாயம்' பாட்டு அன்றைய காதலர்களின் அமுதகீதமாக தொடர்ந்தது.
ஆனால் இன்று? பார்க்கிறார்கள். பழகுகிறார்கள். காதலாகிறார்கள். கல்யாணம் வரை வருவதற்குள் கருத்து வேறுபாடு வந்து விட்டால் காதலுக்கு `பை...பை...' சொல்லிப் போய் விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் காதலைப் பொறுத்தவரையில் `அடைந்தால் மகாதேவி, இல்லையேல் மல்லிகாதேவி' ரகம். `இன்னொரு பெண்ணே இல்லாத உலகில்தானே இருந்த ஒரே ஒரு காதலிக்காக நீ வாட வேண்டும்' என்று யாரோ ஒரு சந்தர்ப்பக் காதலன் எப்போதோ சொன்னதை தங்களுக்காகவே சொன்னதாக எடுத்துக்கொண்டு அடுத்த காதல் அல்லது கல்யாணத்திற்குள் போய் விடுகிறார்கள்.
இப்படிப்பட்டவர்கள் மறுபடியும் பழைய காதலி அல்லது காதலரை எங்காவது சந்திக்க நேர்ந்தால் கூட `ஹாய்' சொல்லி இரண்டொரு வார்த்தை பேசும் அளவுக்கும் தங்கள் இயல்பாக்கிக் கொண்டிருப்பார்கள்.
எப்படிப்பட்ட ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கிறது?
முடிந்தவரை முன்கதைச் சுருக்கம் கேட்காத, அழகை மறைமுகமாக வர்ணிக்கிற ஆண்கள் எளிதில் பெண்களை கவர்ந்து விடுகிறார்கள். காதலி கல்லூரியில் படிப்பவர் என்றால், `பள்ளி நாட்களில் யாரையாவது காதலித்தது உண்டா?' என்று கேட்கிற காதலனை அவளுக்குப் பிடிக்காது. இவன் சந்தேகப் பிராணி என்பதாக அப்போதே முடிவு செய்து அவன் மீதான பிடிப்பையும் அப்போதே விலக்கிக் கொண்டு விடுகிறாள். ஆண்கள் பற்றிய பெண்கள் கணிப்பில், தங்கள் விருப்பத்துக்குரியவன் தன்னை நேசித்த இதயத்தில் இன்னொரு பெண்ணுக்கு எந்த விதத்திலும் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். இதில் மட்டும் எல்லாக் காலத்திலும் பெண்கள் ஒரே மாதிரி இருக்கிறார்கள்.
காதலை பொழுதுபோக்காக வைத்துக் கொள்பவர்கள் இரு தரப்பிலும் தான் உண்டு. அதற்காக காதலே பொழுதுபோக்காக இருந்து விடாது என்பதை நிறைவேறாத காதலுக் காக இப்போதும் உயிரை விடும்காதலர்கள் நிரூபித்துக் கொண்டு தானிருக்கிறார்கள். அதுமாதிரி அற்ப விஷயத்துகாக காதலை கட்செய்பவர்களும் இப்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் வருத்தமான உண்மை.
ஒரு இளைஞனிடம் இன்னொரு இளைஞன் மெரினா கடற்கரையில் இப்படி விசாரித்துக் கொண்டிருந்தான். "உங்க காதல் கட் ஆயிட்டது போலிருக்கே? என்ன காரணம்?''
அடுத்தவன் சொன்னான்: "மிஸ்டு கால் கொடுத்து கொடுத்து என்னை பேச வைத்தே என் பேங்க் பேலன்ஸ் பூராத்தையும் காலி பண்ணிடறா...''
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment