Followers

திருக்குறள்

Monday, July 15, 2013

பயத்துக்கு என்ன காரணம்?

 


விபத்து பற்றிய ஒரு காட்சியை நீங்கள் காலையில் பார்க்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். உங்களுக்கே தெரியாமல் அது உங்கள் மனதில் பதிந்துவிடும். பின்பு நீங்கள் அதை மறந்துவிட்டு, ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்த வேலைகளில் மூழ்கிவிடுவீர்கள்.

மாலை 6 மணிக்கு, கணவரோடு சேர்ந்து தெரிந்தவர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்ள செல்வதற்காக அலங்காரம் செய்துகொண்டு காத்திருக்கிறீர்கள். 5.30 மணிக்கே வரவேண்டிய கணவர், 6.30 மணி ஆகியும் வரவில்லை. காலையில் நினைவுபடுத்திய போது சரியாக ஐந்தரை மணிக்கே வந்துவிடுவதாக சொல்லிவிட்டுத்தான் போனார்.

ஏழு மணி ஆகியும் அவர் வந்து சேரவில்லை என்கிறபோது என்ன செய்வீர்கள். அவரது செல்போனில் தொடர்பு கொள்வீர்கள். `சுவிட்ச் ஆப்' என்று பதில் வருகிறது.

எட்டு மணி ஆகும்போது அவர் மீது உங்களுக்கு கோபமும், எரிச்சலும் வரும். `இவர் இப்படித்தான் ஒருநாளும் நேரத்திற்கு வருவதில் லை. இன்று வரட்டும்.. இரண்டில் ஒன்று பார்த் விடுகிறேன்' என்று மனதுக்குள் திட்டிக்கொள்வீர் கள். அப்போது, அவர் இதுபோல் பலமுறை தாமதமாக வந்த ஒவ்வொரு சம்பவமும் உங்கள் நினைவுக்கு வரும்.

அப்போது நடந்த சண்டைகளும் நினைவுக்கு வரும். குழந்தைகளை திட்ட ஆரம்பித்து, அடிக்க வும் முயற்சிப்பீர்கள். அலங்காரத்தையும் கலைத்து விட்டு, மணியை பார்க்கும்போது இரவு பத்து மணி ஆகிவிட்டது என்று வைத்துக்கொள்வோம். மீண்டும் போன் செய்வீர்கள். `சுவிட்ச் ஆப்' என்பதே பதிலாக கிடைத்தால், உங்களுக்கு உடனே நினைவுக்கு எது வரும் தெரியுமா?

காலையிலே ஒரு விபத்து காட்சியை பார்த்தீர்கள் அல்லவா! அது நினைவுக்கு வந்து விடும். கோபம், எரிச்சல் எல்லாம் மறைந்து பயம் உருவாகி, மனதில் பதிந்து கிடக்கும் அடுக்கடுக்கான விபத்து காட்சிகள் நினைவுக்கு வரும். `அவருக்கு வழியில் ஏதேனும் நடந்திருக்குமோ? அப்படி ஏதாவது நடந்துவிட்டால், என் நிலை என்ன ஆகும்? என் குழந்தைகள் நிலை என்ன ஆகும்?' என்றெல்லாம் நினைத்து பயந்து அழத் தொடங்கி விடுவீர்கள்.

இரவு 11 மணிக்கு கணவர் வந்து உங்கள் முன்னே சோகத்தோடு, சோர்வோடு நிற்கிறார். தலைமை அதிகாரியோடு திடீரென்று சில மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டியதானது. அதை முடித்துவிட்டு வரும் வழியில் பெட்ரோல் தீர்ந்து, வண்டியை தள்ளிக்கொண்டே வந்தது. இடையில் டிராபிக் போலீஸ்காரர் ஒருவர் தடுத்து நிறுத்தி, லைசென்சை கேட்டது என்று ஒன்றுவிடாமல் கூறிவிட்டு, இப்போதுதான் போனை பார்த்தேன் `சார்ஜ்' இறங்கி செயலிழந்து போயிருக்கிறது.. என்று ஒவ்வொரு காரணமாக அவர் அடுக்குகிறார்.

கணவர் சொல்லும் காரணங்களை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். ஆனாலும் மூன்று மணிநேரம் பயம் உங்களை பாடாய்படுத்தி ஏதேதோ எண்ணங்களை எல்லாம் ஏற்படுத்திவிட்டதே அதற்கு என்ன காரணம்? நீங்கள் காலையிலே பார்த்த விபத்து உங்கள் மனதிற்குள் பதிந்து கிடந்ததுதான் காரணம்.

பலகோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் விபத்து எங்கேயும், எப்போதும், ஏதாவது ஒரு விதத்தில் நடந்துகொண்டுதான் இருக்கும். அதை பார்த்துவிட்டதால், கணவருக்கும் அப்படி நடந்திருக்குமோ என்று பயம் கொள்கிறீர்கள். எங்கேயோ ஏதோ ஒரு குழந்தைக்கு அதிர்ச்சிக்குரிய விஷயம் நடந்ததை பார்த்துவிட்டால், நம் குழந்தைக்கும் அப்படி நடந்துவிடுமோ என்று கவலை கொள்கிறீர்கள். அந்த கவலை உங்களுக்கு அவசியம் இல்லை.

"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்கவேண்டுமோ அதுவும் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது

எது நடக்கப்போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்''

என்ற சக்தி வாய்ந்த வாசகங்களில் நம்பிக்கை வையுங்கள். நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதற்கு ஆதாரமான எண்ணங்களையும் மனதில் உருவாக்குங்கள்.

கணவர் `தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்' என்றாலோ, சுவிட்ச் ஆப் என்றாலோ `அவருக்கு ஒன்றும் ஆகாது. நல்லபடியாக வந்து சேர்ந்துவிடுவார்' என்று நினைத்து பயமின்றி நம்பிக்கையோடு காத்திருங்கள்.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.