உலர்ந்த ஆடைகளை
எடுக்க வந்தவள்
ஆடைகளோடு என்
மனதையும்
மடித்து
பத்திரப்படுத்தி போனாள்.
உலரப்பட்ட ஆடைகளில்
நீல நிற சட்டை மட்டும்
என்னுடன் பேசியது.
அன்று பெருத்து இருந்தாயே!!
ஏன் இளைத்தாய் என்றேன்.
அந்த ரகசியம் என்னுடையதல்ல
என்று
வெட்கி நாணி கூனி
ஓடிவிட்டது
அவளைப் போலவே.
வானில் மேய்ந்த சூரியன்
மாடியில் மேய்ந்த நிலவிடம் கேட்டது
உன்னிடம் இருந்து
ஒளி வாங்கும்படி
சாபமிட்டது யாரோ?
பாவம்.
வரத்திற்கும் சாபத்திற்கும்
வித்தியாசம் தெரியாதவன்
ஏய். இந்தப் பாட்டைக் கேளேன்
என்று ஐபோடிலிருந்து நீளும்
இயர்ஃபோனை
உன் காதில் மாட்டினேன்
நல்லா இருக்குடா என்று
நீ தந்த பின் இன்னொருமுறைக் கேட்டேன்
பாடலில் முன்பில்லாத ஓசைகள் கேட்டது.
ஏன் நேற்று மாடிக்கு வரவில்லை
என கோவப்படாதே .
உன்னை எப்போதும்
பார்த்துக் கொண்டேயிருக்க
விரும்புவதில்லை நான்
ஆயிரம் ஆண்டு வாழ்ந்து
என்ன செய்யப் போகிறேன்?
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment