Followers

திருக்குறள்

Thursday, October 14, 2010

கருவறை யுத்தமடா என் காதல்!

 




தன்
கூடு சுமந்து
நகரும் நத்தைபோல்
உன்
காதல் சுமந்து
நகரும் தத்தை
நான்.

நீ முத்தமிட்டு
பரிசளித்த கொலுசுகள்,
இசைக்க மறந்து
சிணுக்கிவிடுமே
என்றுதான் சொல்லாமல்
வைத்திருக்கிறேன்
உன் பிரிவை.

நான் குள்ளம்
என்று கவலைப்படும்
அம்மாவிடம் என்ன
சொல்லி புரியவைப்பது
உன் நெஞ்சில்
இதழ் பதியும் உயரம்தான்
நான் விரும்புவதென்று!

வயிற்றில் சுமந்தபோது
அதிகம் மிதித்தேன்
என்று அம்மா அடிக்கடி
சொல்வாள்.
உன்னைச் சந்திக்க
கருவறையிலேயே துவங்கிவிட்டதோ
என் யுத்தம்?

விரைவில்
உன்னைச் சேர
ஆறு மாதங்களாய்
பிரகாரம் சுற்றுகிறேன்.
காதலுக்குத்தான் இரக்கமில்லை
கடவுளுக்குமா?

சுயம்வரமின்றி கவர்ந்து
சென்றுவிடு என்கிறேன்.
புரவி வாங்க பொருள்
சேர்க்கிறேன் என்று
மறைந்துவிட்டாய் நீ.

இளவரசியாய் வீட்டுச்சிறையில்
வசிப்பதை விட
இதழரசியாய் உன்னுடன்
இணைவதையே அதிகம்
விரும்புகிறது மனசு.

காதலை தந்துவிட்டு
உறக்கத்தை கொள்ளையிட்டுப்
போய்விட்டாய்.
கனவுகளுக்குகூட வழியில்லாமல்
கண்ணீராகிறது என்
இரவு.

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.