கோடைவிடுமுறை என்றாலே அது பள்ளி விடுமுறை தான். இந்த விடுமுறை நாளில் உங்கள் செல்லங்கள் அடிக்கும் லூட்டி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அதற்காக அவர்களை அவ்வப்போது அதட்டிக் கொண்டிருக்காமல், முடிந்தவரை அவர்களை விடுமுறைக் கொண்டாட்டத்துக்கும் அனுமதியுங்கள். இந்த 2 மாத விடுமுறை தரும் உற்சாக அனுபவம் தான் அடுத்த கல்வியாண்டுக்குள் அவர்கள் உற்சாகமாக அடியெடுத்து வைக்க உதவுகிறது.
அதனால் இந்த விடுமுறை நாட்களில் முடிந்தவரை நேரம் ஒதுக்கி அவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லுங்கள். பெற்றோர் தங்கள் சொந்த ஊருக்கு இந்த விடுமுறை
நாட்களில் அழைத்துச் சென்று தங்கள் உறவுகளையும் பிள்ளைகளிடம் அறிமுகபடுத்தலாம். இதன் முலம் இந்த விடுமுறை நாட்கள் குடும்ப உறவுகளுக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்த மாதிரியிருக்கும்.
அதுமாதிரி குழந்தைக்கு ஏதாவது மருத்துவ பரிசோதனைகள் செய்யவேண்டியிருந்தால் அதை இந்த விடுமுறை நாட்களுக்குள் செய்து முடித்து விடுங்கள். பள்ளி திறந்தபிறகு ஒவ்வொன்றுக்கும் அனுமதி கேட்டுக்கொண்டு விடுமுறை எடுப்பது பிள்ளைகளுக்கே படிப்பின் மீது ஒருவித அலட்சியத்தை ஏற்படுத்தி விடக்கூடும்.
விடுமுறை நாட்கள் முடிந்து பள்ளி திறக்க இன்னும் முன்று வாரங்களே இருக்கும் நிலையில், பெற்றோருக்கும் சில பள்ளிக் கடமைகள் இருக்கிறது. பரீட்சை சமயத்தில் விடிய விடிய படித்தார்களே என்ற எண்ணத்தில் விடுமுறை நாட்களில் குழந்தைகள் கொஞ்சம் பிரீயாக தூங்கட்டும் என்று சில பெற்றோர் விட்டு பிடிப்பார்கள். இதனால் பள்ளி திறந்து பிள்ளைகள் மறுபடி பிசியாகும்போது, இந்த அதிகபட்ச காலைத் தூக்கம் பெற்றோருக்கு டென்ஷனை ஏற்படுத்தி வைக்கும். அதனால் பள்ளி துவங்க பத்து நாட்கள் இருக்கும்போதே குழந்தைகளின் காலைத் தூக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கட்டுக்குள் கொண்டு வந்து விடுங்கள்.
அடுத்தது பள்ளிக்கட்டணம். முன்கூட்டியே இதற்கான தொகையை தயார் செய்து வைத்து விடுங்கள். கடைசிநேரத்தில் பீஸ் கட்ட தடுமாறும் நிலைக்கு ஆளாக வேண்டாம். இது உங்களுக்கு சாதாரணமாகத் தெரிந்தாலும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கபட்டு விடுவார்கள்.
சிலர் வீடு மாறும் கட்டாயத்தில் இருப்பார்கள். இப்படிபட்டவர்கள் எடுத்த எடுப்பில் பள்ளிகளை மாற்றிக் கொண்டுவிட முடியாது. அதனால் புதுவீட்டில் இருந்து பள்ளி தொலைவு என்றால் குழந்தையை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வாகன ஏற்பாட்டை முதலிலேயே கவனித்து விடுங்கள்.
சில பள்ளிகளில் `சீருடைகளை நாங்களே தருவோம். நாங்களே தைக்கவும் ஏற்பாடு செய்து விடுவோம்' என்பார்கள். தைப்பதற்கும் ஒரு கணிசமான தொகையை கறந்து விடுவார்கள். சில பள்ளிகளில் சீருடை விஷயத்தை பெற்றோரிடம் விட்டு விடுகிறார்கள். இப்படிபட்ட பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் பள்ளிச்சீருடைகளை ஒரு மாதத்துக்கு முன்பே வாங்கி தைக்க கொடுத்து விடலாம். இதில் தாமதித்தால் பள்ளி தொடங்கிய பிறகும் டெய்லர் கடையில் தவம் கிடக்க வேண்டியிருக்கும்.
நாளை பள்ளிக்கூடம் என்றால் முந்தினதினம் தான் சில பெற்றோர் உஷாராவார்கள். ஸ்கூல்பேக், ஷூ, லஞ்ச் பாக்ஸ் என்று அரக்க பறக்க வாங்கிக் கொண்டிருப்பார்கள். கூட்டத்தில் நின்று நசுங்கி பிசுங்கி வாங்கி வந்தால், பிள்ளைகள் `எனக்கு இந்த டிசைன் பிடிக்கலை…இந்த லஞ்ச் பாக்சையா நான் கேட்டேன்…' என்கிறமாதிரி எதிர்ப்புக்குரல் கொடுக்கத் தொடங்கி விடுவார்கள். அதனால் இதையெல்லாம் ஒரு வாரத்துக்கு முந்தியாவது உங்கள்அருமை பிள்ளைகளையும் கடைக்கு அழைத்துக் கொண்டு போய் வாங்கிக் கொடுங்கள். இரட்டைச் செலவை தவிர்க்கலாம்.பெரும்பாலான பள்ளிகளில் இப்போதே புத்தகங்களை கொடுக்கத் தொடங்கியிருப்பார்கள். வாங்கி வந்ததோடு கடமை முடிந்தது என்று இருந்து விடாதீர்கள். பைண்ட் செய்யவேடிய புத்தகங்களை குறித்தநேரத்தில் தருபவர்களிடம் கொடுத்து குறைந்தபட்சம் பள்ளி திறக்கும் இரண்டு நாட்களுக்குமுந்தியாவது வாங்கி விடுங்கள்.
அதுமாதிரி பிரவுன்ஷீட் அட்டை போடும் வேலையையும் முன்னதாகவே முடித்து விடுங்கள்.
பிள்ளைகளை புதிய பள்ளியில் சேர்க்கும் பெற்றோர், அந்தபள்ளியில் பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான எல்லா தகவல்களையும் முன்னதாகவே தெரிந்து கொள்ள பாருங்கள். இந்தபள்ளியில் சீட் கிடைத்ததே பெரிய விஷயம் என்று எண்ணி, பள்ளியும் வாங்குகிற பீசுக்கு அநியாயத்துக்கு நல்லதாக இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். பள்ளியின் கையேட்டில் கொடுக்கபட்டுள்ள எல்லா வசதிகளும் நம் பிள்ளைக்கு கிடைக்கும் என்று நம்பி விட வேண்டாம். குறிபாக `கணினி லேப் வசதி' உண்டு என்று கையேட்டில் குறிப்பிடபட்டிருந்தால், பயிற்சிக்குத் தேவையான போதுமான கணினிகள் உள்ளனவா, பயிற்றுவிக்க போதிய ஆசிரியர்கள் உள்ளனரா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
பணி நிமித்தமாகவோ, தொழிலுக்காகவோ சில பெற்றோர்க்கு ஊர்மாற்றம் கட்டாயமாகி விடும். இவர்களின் பிள்ளைகள் பிளஸ்-1 படிப்புக்காக புதிய பள்ளியில் சேர்க்கபட வேண்டியிருந்தால் தரமான பள்ளியை தேர்வுசெய்வது முக்கியம். கடந்த சில ஆண்டுகளின் அந்த பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், அவர்களின் மார்க் பட்டியல் வரை பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும். அதில் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே உங்கள் பிள்ளைகளை அந்தபள்ளியில் சேர்க்க வேண்டும்.
சில பள்ளிகளில் பெயருக்கு ஒரேயொரு தடவை பெற்றோர்-ஆசிரியர் கூட்டம் நடக்கும். அத்தோடு சரி. அடிக்கடி பெற்றோர்-ஆசிரியர் கலந்துரையாடல் நடக்கிற பள்ளியாக பார்த்து தேர்வு செய்யுங்கள். அப்போது தான் பள்ளி நிலவரம், பிள்ளைகளின் படிப்பு நிலவரம் இதெல்லாம் தெரியவரும். வீட்டில் பிள்ளைகளின் அணுகுமுறைக்கும், பள்ளியில் அவர்களின் செயல்பாட்டுக்கும் ஏதாவது வித்தியாசம் இருந்தால் அடிக்கடி நடக்கும் இந்தமாதிரியான சந்திபில் தெரிய வந்து விடும். பிரச்சினை பெரியது என்றால் கூட மனோதத்துவ ரீதியிலான அணுகுமுறை முலம் பிள்ளைகளை இயல்பாக்கி விட முடியும்.
பெரிய பள்ளிகள் என்று சொல்லிக் கொண்டு கட்டணத்தை கட்டுக்கட்டாக வாங்கும் சில பள்ளிகளில் கூட `சுகாதாரம் என்ன விலை?' என்று கேட்பார்கள். பாதரும், கழிப்பறை பக்கம் போனாலே குமட்டிக் கொண்டு வரும். இதற்கு பயந்தே பல பிள்ளைகள் பள்ளிக்கு போனபிறகு மறந்தும் பாத்ரும் பக்கம் எட்டி பார்பதில்லை. பாத்ரும் வந்தால் அடக்கிக் கொண்டு விடுகிறார்கள். சிலர் பாத்ரும் வந்துவிடும் என்று பயந்து பள்ளியில் தண்ணீரே குடிப்பதில்லை.
பாத்ருமை அடக்கி வைப்பதால் ஏற்படும் நோய்கள் கிட்னி பாதிப்பு வரை கொண்டுவந்து விட்டுவிடும். பிள்ளைகளின் ஆரோக்கியம் கருதி பள்ளியில் சேர்பதற்குமுன் பாத்ரும் எப்படி இருக்கிறது என்பதை கட்டாயம் பார்த்து விட வேண்டும். பார்த்ததுமே குடலை புரட்டிக் கொண்டு வந்தால் சொல்லாமல் கொள்ளாமல் `எஸ்கேப்' ஆகிவிடுங்கள். நல்ல கல்வி முக்கியம் மாதிரியே, நல்ல ஆரோக்கியமும் அவசியமல்லவா!
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment