காலங்கள் ஆற்றிவிடும் என்பது
மெய் என்று
எல்லோரையும் போல்
நம்பிக்கொண்டிருந்தேன்.
ஆறு வருடங்கள்
என்கிறது நாள்காட்டி,
நூறு வருடங்களின்
பொதி சுமந்த பாரம் நெஞ்சில்.
வருடங்களின் கரைதல்
துயரங்களின்
கரையேறுதலை இன்னும்
கற்றுத் தரவில்லை.
இன்றும் கிராமத்து
ஓட்டு வீட்டின் முற்றங்களில்
அப்பாவின் சுவடுகளை
நினைவுக் கைகள்
தழுவத் துடிக்கின்றன.
என்
தொலைபேசி அழைப்பில்
பதறியடித்து ஓடிவந்த
பாதச் சுவடுகளல்லவா அவை !
பழுதடைந்த படிகளில்
பாதம் பதிக்கையில்
உள்ளறையிலிருந்து
பரவசத்துடன் ஓடிவருகிறது
அப்பாவின் குரல்.
எனக்குப் பசியெடுப்பதை
என்
வயிறு அறியும் முன்
அறிந்த குரலல்லவா ?
விரல் பிடித்து நடந்த
வரப்புகளில்
அப்பாவின் மூச்சுக்காற்றை
ஆழமாய் இழுத்துத்
தேடித் தேய்கிறது நுரையீரல்.
மரணப் படுக்கையில் கூட
என்
வருகை தேடி
பாரம் இழுத்த மூச்சல்லவா !
அவருடைய கட்டிலின் ஓரங்களில்
இன்னும்
மிச்சமிருக்கும் கைரேகையை
விரல்கள்
அனிச்சைச் செயலாய்
அரவணைத்துக் கசிகின்றன.
ஒரு முறையேனும்
பாதம் தொட்டு
அருகிருக்கத் தவித்து
குதிக்கும் கண்ணீரும்
புகைப்படப் பூக்களருகே
இயலாமையால் விசும்புகின்றன.
வெயில்க் கழுகுகள்
கொத்திக் கிழிக்கும்
நகரத்து வியர்வை வீதிகளிலும்
அப்பாவின் குளிர்ச்சியை
மனம்
மீண்டெடுத்துத் தவிக்கிறது.
இலைகளில்லா
என் தோட்டத்துச் செடிகளில்
கிளையுதிர் காலம்
இன்னும் நிற்கவே இல்லை.
அவரோடு வாழும் கனவுகள்
கனவுகளாகிப் போனதால்,
கனவுகளிலேனும்
அவருடன் வாழும் கனவே
இப்போதென்
கலையாத கனவாய் !
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment