திருவிழாவின்
அத்தனைக் கொலுசு
சத்தத்திலும்
எனக்கு மட்டும்
தனியாகக் கேட்கும்
உன் கொலுசின் இசை!
வெள்ளிக்கிழமை இரவானால்
எங்கள் வீட்டுக்கு வருவாய்!
உனக்கான ஒலியும் ஒளியும்
தொலைக்காட்சியில் ஓட
எனக்கான ஒலியும், ஒளியும்
உன் கொலுசிலும் விழியிலும்!
கல்லூரியின்
கடைசி நாளில்,
"நீ பேசுவதைக் கேட்காமல்
இனி எப்படி இருப்பேன்" என்றேன்.
உன் கொலுசைக் கழற்றிக்
கொடுத்து விட்டுப்போனாய் நீ!
மொட்டை மாடியில்
படித்துக்கொண்டிருப்பேன்.
மெதுவாய்ப் படியேறி
வரும் உன் கொலுசு சத்தம்
என் மனசோ
சலங்கை கட்டியாடும்!
கொலுசின்
திருகாணிப் பூட்டிவிடுகையில்
தெரியாமல்(!)
உன் காலுக்கு
முத்தமிடும் என் விரல்.
தெரிந்துகொண்டு
சத்தமிடும் உன் கொலுசு!
வாசலில்
பாண்டியாடும்போது
கொலுசின்
திருகாணி தொலைந்ததால்
அழுதுவிட்டாய் நீ!
தேடித் தேடித் தெருவையே
உழுதுவிட்டேன் நான்!
சத்தம் போட்டபடி
உன் காலடியில்
துள்ளுகிறது உன் கொலுசு!
சத்தமில்லாமல்
என் மனசடியில்
கொல்லுகிறது என் காதல்!
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
1 comment:
நண்பா கொலுசை போன்ற அழகான கவிதை.
Post a Comment