Followers

திருக்குறள்

Thursday, January 27, 2011

என்னிடம் பெண்மையில்லை

என்னிடம் பெண்மையில்லை
மன்னித்துவிடுங்கள்!

வளையல் குலுங்க
கொலுசொலியுடன் வளையவரும்
பெண்மை

காலை முழுகி
குங்குமத்துடன் கணவனை தட்டியெழுப்பும்
பெண்மை

நாற்சுவரில் தூசிதட்டி
நல்ல பெயர்வாங்க
முடியவில்லை என்னால்

கண்மூடி நின்று
கணவனுக்கும் குழந்தைக்குமாய் மட்டும்
பிரார்த்திக்க விருப்பமில்லை எனக்கு
அதற்கும் மேல
சிந்திக்க முடிகிறது என்னால்...

சமூகத்தின் வக்கிர வார்த்தைகளை
வெல்ல
மொழியும் வழியும்
புரிந்து போனதில்
மௌனித்திருக்க மறுக்கிறது
அது தாயோ
என்னை தனதாக்கிக் கொண்டவனோ

தொங்கப்போடும் தாலியில்
எனது கண்ணியத்தையும்
பெண்மையையும் நிரூபிக்க
இஷ்டமில்லை

நிமிர்ந்தே நடக்கிறேன்.
எந்த ஆணிடமும்
சிரித்து பேச முடிகிறது என்னால்
அவர்களையும் மனிதர்களாகத்தான்
பார்க்க முடிகிறது
மன்னித்து விடுங்கள்.

தாய்மை என்ற பாத்திரத்தில்
விழுவதில் பலதும்
எதிர்பாலின்
சோம்பேறித்தனமும்
சொற்பத்தனமும் என்பது
தெரிந்த பின்
எழுதுகிறேன்.

உங்களின் சுகவாழ்விற்காய்
எமக்கு அளித்த பட்டம்
தாய்மை

வெட்கத்தின் வரைமுறை
தெரியவில்லை எனக்கு
அடக்கம் என்பதன் பொருள்
வித்தியாசமாயிருக்கிறது
எனது அகராதியில்

பொறுமை என்பதன்
அளவுகோல்
அவர்களதும் எனதும்
ஒரே அளவில் இல்லை

மரபுகளை முறித்துக்கொண்டு
மனிதனாக இருக்கச் சொல்கிறது
எனது சுயம்

நீங்கள் நினைக்கும் பெண்மை
என்னிடம் இல்லை.
மன்னித்துவிடுங்கள்!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.