Followers

திருக்குறள்

Friday, March 18, 2011

நீ இல்லா என் வாழ்வில்....

*
ஆதாம்
ஏவாள் சுவைத்த
பாவக்கனி
காதல்!

*

துளிர் துயிலும்
மழைத்துளி பருகவரும்
சின்னஞ்சிறு சிட்டுக்குருவியாய்
என்னிருதயம்
உனைத் தேடி
வரும் அந்நாளில்
காத்திரு காதலோடு!

*

கசப்பு மருந்தருந்திய
குழந்தையின் முகமாய்
இதயம்;
உன்னை காணா நாட்களில்!

*

ஒரு நாள்
மழையோடு;
மற்றொருநாள்
மலரோடு;
இன்னொரு நாள்
இசையோடு என்று
ஒவ்வொரு சந்திப்பின் பிறகும்
ஒவ்வொன்றோடு திரும்புகின்றேன்;
பொத்தி வைக்க இடமில்லாமல் போகும் நாளில்
மொத்தமாக கடத்திச் செல்வேன் உன்னை!

*

உலர்ந்து வெளிறி
உடையும் நிலையிலிருக்கிறது
ரோஜா இதழ்கள்;
பனி கூட உதிராமல்
பத்திரமாய் இருக்கிறது
அதை நீ கை சேர்த்த கணம்!

*

குளித்து வரும்
உன்னில் வழியும்
நீர்த்துளிகள் நினைவூட்டுகின்றன;
மழை தூரிகை
சன்னல் கண்ணாடியில்
வரையும் ஓவியங்களை!

*

தேநீரில்
கரைந்திட காத்திருக்கும்
சர்க்கரைக் கட்டியென
உன்னுள் கலந்திட
படைக்கப்பட்டவள் நான்!

*

உன்
வளையல் சிணுங்கும் ஓசைகளையும்
கொலுசு கொஞ்சும் ஒலிகளையும்
பத்திரப்படுத்துகிறேன்
என் கவிதைகளுக்கான இசைக்குறிப்புகளாய்!

*

உன்னைப் போலவே
அழகாயிருக்கிறது
நம் காதலும்!

*

நீ உறைய – இதயம்
கொத்திக் கொத்தி
கூடு அமைக்கிறது
காதல் குருவி!

*

அதிகாலை எழுந்து
சோம்பல் முறிக்கிறாய்;
எங்கோ மெல்ல
மொட்டு வெடிக்கிறது
ஓர் தாமரை!

*

கோபமாய்
நீ முகம் திருப்பிடும்
கணத்தில்
சட்டென நிகழ்ந்தே விடுகிறது
என் வானில்
ஓர் சந்திர கிரகணம்!

*

பார்வையற்ற மனிதனின்
கைத்தடியாய்
நீ இல்லா என் வாழ்வில்
நின் நினைவுக்குறிப்புகள்!

*

எப்படி பத்திரப்படுத்துவதெனத் தெரியவில்லை
உன் இதழ்கள்
என் மேல் வரைந்த
ஈர ஓவியங்களை!

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.