கூட்டுக்குடும்பங்கள் இன்றைக்கு அருகி வருகின்றன. ஒன்றாய் இருக்கும் குடும்பங்கள் சிதறுண்டு போவதற்குக் காரணம் நாம் பேசும் பேச்சும் நம் செயலும்தான். புதிதாக திருமணமான பெண்கள் கூட்டுக்குடும்பத்தில் உள்ளவர்களுடன் எவ்வாறு பேசுவது என்பது பற்றி நிபுணர்கள் கூறும் ஆலோசனையை கேளுங்களேன்.
பாடி லாங்குவேஜ் என்பது நம்மைப் பற்றி பிறருக்கு உணர்த்தும் உன்னத மொழி. ஒருவரிடம் வார்த்தையால் நாம் பேசுவதற்கு முன்பே நம் கண், கை அசைவுகள், அமரும் விதம் போன்றவை நம்மைப் பற்றி அவரிடம் வெளிப்படுத்துகின்றன. இதனைத்தான் 'பாடி லாங்குவேஜ்' என்கின்றனர். புதிதாக திருமணமான பெண் அதிகம் பேசுவதை விட தன்னுடைய உடல்மொழிகளினாலேயே புகுந்த வீட்டு உறவுகளுடன் பினைப்பை அதிகரிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
புன்னகையுடன் பேசுங்கள்
புதிய இடம் புதிய உறவுகள் என திருமணமான பெண்கள் நிறைய புதியவைகளை சந்திக்க வேண்டியிருக்கும். யாராக இருந்தாலும் எதை சொல்வதாக இருந்தாலும் உங்கள் கைகளால் விரித்தபடி புன்னகை தவழ பேசுங்கள். பாடி லாங்குவேஜ் எவ்வளவு முக்கியம் என்பது உங்களுக்கே புரியும்!. நாம் மற்றவரிடம் பேசுவதற்கு முன்பே எங்கோ பார்த்துக் கொண்டு, நகத்தை கடித்துக் கொண்டு, முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கைகளை கட்டிக் கொண்டு பேசிப் பாருங்கள். உங்கள் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருப்பவர்களும், ஆர்வம் இழந்து விடுவார்கள்.
உறவுகளுடன் பிணைப்பு
புதிய உறவுகளுடன் பிணைப்பை அதிகரிக்க பாடிலாங்குவேஜ் அவசியம். கணவர் வீட்டில் உள்ள பெரியவர்களுடனோ, அல்லது சிறியவர்களுடனோ கணவருடனோ அல்லது மாமியார், மாமனாருடனோ சரியான பாடி லாங்குவேஜில் பேசிப் பாருங்கள் நீங்கள் சொல்வதை அவர்கள் கண்டிப்பாக கேட்பார்கள்.
குரலை உயர்த்த வேண்டாம்
நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும். நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் உங்கள் மீது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும். பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.
கண்களைப் பார்த்து பேசுங்கள்
மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும். அதேபோல் மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது. நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.
பரிவோடு பேசுங்கள்
வீட்டில் இருக்கும் தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்களிடம் பரிவோடு பேசுங்கள். அதேபோல் குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பாசத்தோடு பேசவும். உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment