Followers

திருக்குறள்

Wednesday, May 23, 2012

ஊடலில் பிறக்குமே காதல்..

டல் என்பது, உயிரோட்டமுள்ள ஒரு பொய்க்கோபம். ஆனாலும் தம்பதிகளும், காதலர்களும் ஊடல் என்பதை எதுவரை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஒரு வரையறை உள்ளது.

சட்டென்று மாறக்கூடிய ஒன்றாகவும், கோபத்தை தொடர்ந்து செயலில் காட்டாத ஒன்றாகவும் ஊடல் இருத்தல் அவசியம் என்கிறது இலக்கியம். ஒரு குழந்தையின் கோபம் போன்று மிகவும் மென்மையாக இருக்கவேண்டும். அதுவே ஊடலுக்கு அழகைத் தரும்.

மணவாழ்க்கையைப் பொறுத்தவரை சிறு சிறு கோபங்கள் மற்றவர் மனதை புரிந்து கொள்ள உதவும். ஆழ்மனதில் தோன்றும் அன்பு உரிமையாக மாறி, அந்த உரிமை தவிர்க்கப்படும்போது சிறு சிறு கோபங்களாக வெளிப்படும். இந்த கோபத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மனதில் சேர்த்து வைத்துக் கொள்ளக்கூடாது. சேர்த்துவைத்தால் அதுவே வேறுவிதமாக மாறி, கருத்து வேறுபாட்டிற்கு காரணமாகி விடும். தம்பதிகள் மனதில் ஏற்படும் ஊடலை இணக்கமான பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்வது நல்லது. ஊடல் பிரச்சினைக்குள் மூன்றாவது நபரை இடையில் வர அனுமதிக்கக்கூடாது. அனுமதித்தால் அது அவர்களுக்குள் இருக்கும் காதலை காலியாக்கிவிடும்.

ஊடல் என்பது ஒருவர் மனதை, பிடித்தமான இன்னொருவர் புரிந்து கொள்ள உதவி செய்யும் என்பது உண்மைதான். ஆனால் அந்த ஊடல் வெகுகாலம் நீண்டு விடக்கூடாது. ஊடல் இல்லாமல் மணவாழ்க்கை இல்லை என்பதால் இந்த ஊடல் முக்கியத்துவம் பெறுகிறது.

ஊடல் இல்லாத மண வாழ்க்கை ரசனை குறைந்தது. இயந்திரமயமானது. இதனை யாரும் ரசிக்க முடியாது. காதல் திருமணமானாலும், பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணமானாலும் அங்கே ஊடலுக்கு இடமுண்டு.

ஏன் இதைப்பற்றி இவ்வளவு தூரம் பேச வேண்டும்? ஏதாவது ஒரு தருணத்தில் வாழ்க்கையில் சிக்கல் தலைதூக்கும்போது இந்த ஊடல் நினைவுக்கு வந்து அவர்களிடையே அன்பை பலப்படுத்தும். வாழ்க்கையில் ஒன்றாக இருந்த இன்ப நாட்களை நினைவுபடுத்தி மீதமுள்ள நாட்களை மகிழ்ச்சியாக்க உதவும்.

"தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமையா? உடனே விவாகரத்து'' என்ற அவசரத்தில் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அவர் களுக்குள் ஊடலும், கூடலும் இல்லாமல் இருப்பதுதான். விட்டுக்கொடுக்கும் பெருந்தன்மையையும், விளக்கம் அளிக்கும் பொறுமையையும், அன்பின் ஆழத்தை வெளிப்படுத்தும் தன்மையையும் ஊடல் உருவாக்கும்.

வயதான தம்பதிகளுக்கு இடையில் ஏற்படும் ஊடல் அவர்களுடைய அன்பை பலப்படுத்த உதவும். குளிருக்கு கதகதப்பான நெருப்பைப் போன்றது ஊடல் என்று பெர்சியன் கவிஞர் கூறுகிறார். அந்த நெருப்பை வளரவிட்டு வேடிக்கை பார்க்கக்கூடாது. ஊடலும் அப்படித்தான். அதன் எல்லைக் கோட்டுக்குள் நிறுத்திவிட வேண்டும். இந்தப் பொறுப்பு தம்பதிகள் இருவருக்கும் இருக்கிறது. அதை வளரவிட்டு வன்மத்தை வளர்த்துக் கொள்ளக்கூடாது. ஊடல் என்ற தென்றல் திசை மாறி சூறாவளியாகிவிடாமல் பார்த்துக்கொள்வது தம்பதிகளின் தலையாய பொறுப்பு.

குடும்பத்தில் மட்டுமல்ல, அலுவலகம், பொது இடங்களிலும் சின்னச்சின்ன கோபம் தவிர்க்க முடியாதவை. அதை மென்மையாக வெளிப்படுத்தும்போது பெரும்பாலும் சரி செய்யப்பட்டு விடும்.

வெளிப்படையாக பேசுவதாக நினைத்துக் கொண்டு ஒருவரைப் பற்றி மற்றவர் வேண்டாத விஷயங்களை வெளியே சொல்லும்போதுதான் சிக்கலை வலிய வரவழைத்துக் கொண்டவர்களாகிறோம். இதிலும் சிலர் உங்களிடம் வாய் வார்த்தையாக எதையாவது பிடுங்க முயற்சிப்பார்கள். அவர்கள் தந்திரமாக உங்களிடம் பேசி மற்றவரைப்பற்றி அறிய முற்படும்போது, கூடுமானவரை அதை தவிர்ப்பது நல்லது.

உங்களுடைய விளையாட்டுத்தனமான கோபத்தை விபரீதமாக மாற்றக்கூடிய சக்தி உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு இருக்கிறது. அது நாளடைவில் வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தி முடிவில் உங்களுக்கே சிக்கலை உண்டு பண்ணிவிடும். உங்களுடைய மகிழ்ச்சியை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம். கோப தாபங்களை யாரிடமும் சொல்லி விடக்கூடாது. அது ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு கோணத்தில் புறப்பட்டு கடைசியில் விபரீத அர்த்தம் கொள்ளப்பட்டு உங்களையே பதம் பார்த்து விடும்.

***

வயதான தம்பதிகளுக்கு இடையே கூட ஊடல் ஏற்படும். அது அவர்களுடைய வாழ்க்கையின் அன்பையும், உரிமையையும் கூட்டுகிறது. தேவையற்ற விஷயங்களுக்கெல்லாம் லேசாக கோபம் கொள்வது, விளையாட்டு ஊடல். ஏதோ உள்அர்த்தம் இருப்பதாக நினைத்துக்கொண்டு கோபிப்பது கற்பனை ஊடல். மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கவும் இந்த ஊடல் பயன்படுகிறது. இதற்கு சிலர் தவறான அர்த்தங்களை கற்பிக்க முயற்சி செய்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

 

மறுமொழிப்பெட்டி:
தமிழிலும் மறுமொழியிடலாம்
Loading...

No comments:

Post a Comment

நெஞ்சார்ந்த நன்றிகள்......

அன்பு தமிழ் நண்பர்களுக்கு வணக்கம், நான் படித்ததில் பிடித்த பல நல்ல செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன், மென்மெலும் என்னை ஊக்கபடுத்தும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்......
பதிவுகளை படித்துவிட்டு உங்கள் கருத்துகளை தயவுசெய்து பதிவு செய்யுங்கள்.