காதலுக்கு நீளம், அகலம் உண்டா? காதலுக்கு மணம் உண்டா? குணம் உண்டா? அழகு உண்டா? எந்த `உண்டா'வுக்கும் இல்லை என்று தான் பதில் வரும்.
இவ்வளவு ஏன், காதலுக்கு கண்ணில்லை, அறிவில்லை என்று கூட சொல்கிறோம். இருக்கட்டும். காதலுக்கு நிறம் உண்டு என்று இப்போது சொல்ல முற்பட்டிருக்கிறார்களே, அது தான் அடுத்த கட்ட ஆச்சரியம்.
அதுவும் காதலின் நிறம் சிவப்பு என்பது வரை முடிவே செய்து விட்டார்கள்.
சிவப்பு என்பது காதலின் நிறமாம். காரணம், இதயத்தின் நிறம் சிவப்பு. முதன்முதலில் மனிதனைப் படைத்த இறைவன், அவன் வாழ்வதற்காக சுற்றி இயற்கையைப் படைத்தான். தாகம் தீர்க்க தண்ணீரைப் படைத்தான். அவன் மகிழ்ச்சியாய் இருக்க அவனுக்கொரு துணையாய் பெண்ணைப் படைத்தான். அதன்பிறகு தான் அவன் இதயம் சந்தோஷமாய் துடிக்க ஆரம்பித்தது.
இதுவே காதலின் முதல்படி. அதனால் காதலுக்கு அடையாளமாய் இதயத்தை காட்டி னார்கள்.
சிவப்பு அணுக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரத்தம், காதலின் அடையாளம் என்று கூறப் படுகிறது. ஒரு உடலுக்கு ரத்தம் மிகவும் முக்கியம். பாரபட்சமின்றி அது உடலின் எல்லா பாகங் களையும் இயக்குகிறது.
ரத்தம் இல்லாமல் உடலில்லை. காதலில்லாமல் உயிரும் இல்லை. பாரபட்சமில்லாமல் அனைத்து உயிர்களையும் இயக்கக்கூடியது ரத்தம். அதனால் காதலின் நிறம் சிவப்பு.
ரத்தம் புனிதத்தின் பிரதிபலிப்பாக கருதப்படுகிறது. புனிதத்தின் சின்னமாக போற்றப் படுகிறது இயேசு வின் உடலில் இருந்து வெளிப்பட்ட ரத்தம் பாவங் களைப் போக்கும் என்று பைபிளில் கூறப் பட்டுள்ளது.
புனிதமான காதலுக்கு தவறுகளை மனப்பூர்வமாக மன்னிக்கும் தன்மை இருப்பதால் காதல் வாழ்கிறது. காதலர்கள் வாழ்கிறார்கள்.
பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை காதலுக்கு அடையாளமாக காட்டுகிறார்கள். நெருப் பிற்கு இரும்பையும் வளைக்கும் ஆற்றல் உண்டு. காதலும் அப்படித்தான். காதலுக்கும் வளைந்து கொடுக்கும் ஆற்றல் உண்டு. நெருப்பானது சுற்றியிருக்கும் அனைத்தையும் தன் வசப்படுத்திக் கொள்ளும். அதுமாதிரி எப்படிப்பட்ட கொடூரமான உள்ளம் படைத்தவர்களும் காதல் வயப்பட்டு விட்டால் பக்குவப்பட்டு விடுவார்கள். நெருப்பு எல்லாவற்றையும் அழித்து முடிவில், தான் மட்டுமே தனித்து நிற்கும். காதலும் அப்படித்தான். அதனால் தான் காதலையும் நெருப்புக்கு ஒப்பிடுகிறார்கள், அறிஞர்கள்.
சிவப்பு ஐஸ்வர்யத்தின் நிறம். ஐஸ்வர்யம் என்பது மனதிற்கு மகிழ்ச்சியை தரும். ஐஸ்வரியதேவியான லட்சுமியை சிவப்பு நிற உடையில் தான் அடையாளம் காண்கிறோம். அவள் அமர்ந்திருக்கும் செந்தாமரையும் சிவப்பு.
கீழ்வானில் சூரியன் சிவப்பு. புதியதாய் பிறக்கும் உயிர்கள் எல்லாமே சிவப்பு நிறத்தில் தான் காட்சி தரும். சிவப்பு என்றால் புதியது என்று பொருள். இதயத்தில் புதியதாய் தோன்றும் காதலும் இந்த வகையில் சிவப்பாகவே கருதப்படுகிறது.
உடலுக்கு புத்துணர்ச்சியை தந்து காதல் உணர்வைத் தூண்டக்கூடிய ஸ்டாபெர்ரி பழத்தின் நிறமும் சிவப்பு தான். மருத்துவரீதியாக இதில் உள்ள விசேஷ நறுமணம் மனதுக்கு மகிழ்ச்சியை தருவதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் கூறப்படுகிறது. காதலுக்கு அடையாளமாக சொல்லப்படும் இந்தப் பழம், இதய வடிவில் இருப்பது இன்னொரு சிறப்பு.
காதல் மட்டுமல்ல, அபாயத்தின் நிறமும் சிவப்பு தான். உலகில் காணப்படும் எல்லா அபாய அறிவிப்புகளும் சிவப்பு நிறத்தில் தான் காணப்படும். வாழவைக்கும் காதலே சில நேரங் களில் உயிரையே விட்டுவிடும் அளவுக்கும் கொண்டு விட்டு விடுகிறது. இப்படி காதல் இன்னொரு பக்கம் விபரீதப் பாதையில் பயணித்தாலும், காதல் அழியாத சக்தியாய் இயங்கிக் கொண்டு தான் இருக்கிறது. அதனால் சிவப்பு நிற அபாயம் ஒருபோதும் காதலை தடை செய்யப் பயன்படுவதில்லை. அபாயம் என்று தெரிந்த பிறகும் புதிய புதிய காதலர்கள் உருவாகிக் கொண்டு தானே இருக்கிறார்கள்..!
காதலை சிவப்பு ரோஜாவுக்கு ஒப்பிடுகிறார்களே, ஏன் தெரியுமா? ரோஜா இதழ்கள் காதலர் களின் மென்மையான இதயத்தை குறிப்பது. அதன்ஆழ்ந்த நிறம் காதலின் வலிமையை குறிப்பது. அதன் நறுமணம் அன்பைக் குறிக்கும். அதன்முட்கள் கடந்து வந்த வேதனை யான அனுபவங்களை வெளிப்படுத்தும். முட்களுக்கிடையே பூத்திருக்கும் இந்த மென்மை யான சிவப்பு ரோஜாவே உலகெங்கிலும் உள்ள காதலர்களின் அன்புத் தூதுவனாக செயல்படுகிறது... செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இப்போது சொல்லுங்கள். காதலின் நிறம் சிவப்பு என்பது பொருத்தம் தானே!
No comments:
Post a Comment