தாள் இல்லை,
கவிதை எழுத
தாவணி கேட்டால் முறைக்கிறாய்.
கவிதை சுமக்கும் தாவணி
கொஞ்சம் கவிதை சுமந்தால்
தவறொன்றும் இல்லை.
*
கொடியில் காயும்
உன் வெள்ளை தாவணிக்கு
சகதுணிகளுக்கு மத்தியில்
பூ போட்ட தாவணி என்கிற
அடையாளம் கிடைத்துவிட்டது.
*
உன் வெட்கத்தை பார்த்த
முதல் தாவணியும்,
என் வெட்கத்தை பார்த்த
முதல் வேட்டியும்
ஒன்றாய் உலர்கையில்
வெட்கப்பட்டனவே!
கவனித்தாயா?
*
பூப்போட்ட தாவணி அழகென்றேன்.
முந்தானையால் கண் கட்டிவிட்டாய்,
சத்தியமாய் தாவணியைத்தான் சொன்னேன்.
நம்பாவிட்டாலும் பரவாயில்லை
கட்டை மட்டும் அவிழ்த்துவிடாதே!
*
தொலைந்த தாவணியை
வீணாய் தேடாதே!
எனதறையில் பத்திரமாய்
நம் காதலை
அதில் தான்
தூளியிட்டிருக்கிறேன்.
*
அத்தை சொல்லச்சொல்ல கேளாமல்
சாயம் போகும்
உன் புது தாவணியோடு
என் சட்டையை ஊறவிட்டு
கறை படுத்திக்கொண்டேனே
அன்றிலிருந்து தான்
காதலிக்கவும் ஆரம்பித்தேன்.
*
எனக்காக கிழிக்கப்பட்ட தாவணிகளின்
கணக்கு பார்க்க வேண்டும் என்கிறாய்.
பொறு…
உன் தாவணித்துண்டுகளுக்காக
பட்டுக்கொண்ட காயங்களை
எண்ணிச்சொல்கிறேன்.
மறுமொழிப்பெட்டி: | ||
Loading... |
No comments:
Post a Comment